ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவது எப்படி?


ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
x
தினத்தந்தி 5 Aug 2017 5:00 PM IST (Updated: 5 Aug 2017 3:42 PM IST)
t-max-icont-min-icon

எங்கேயும், எப்போதும், எல்லோரும் ஸ்மார்ட்போனில் மூழ்கியிருப்பது தற்போது சர்வ சாதாரணமான காட்சி.

ங்கேயும், எப்போதும், எல்லோரும் ஸ்மார்ட்போனில் மூழ்கியிருப்பது தற்போது சர்வ சாதாரணமான காட்சி.

தொலைத்தொடர்புக்கு ஒரு வசதியான சாதனமாக உருவாகிய செல்போன், இன்று பலருக்கு உடம்பின் ஓர் உறுப்பு போலவே ஆகிவிட்டது.

செல்போன் இன்றி பலருக்கும் விடிவதும் இல்லை, முடிவதும் இல்லை. நொடிக்கு ஒருமுறை போனுக்கு விரலைக் கொண்டு போவது ஓர் அனிச்சைச் செயலாகவே ஆகிவிட்டது.

ஸ்மார்ட்போன்கள் ஒரு தனிச் செயலாளர் போல பல்வேறு சேவைகளை வழங்கினாலும், எல்லா விஷயங்களுக்கும் ஒரு மறுபக்கம் உண்டல்லவா?

அது ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கும் இருக்கிறது. வெளியே தெரியாவிட்டாலும் அல்லது ஒப்புக்கொள்ளாவிட்டாலும், பலரும் இந்த கையடக்க சாதனத்தின் அடிமைகளாகிவிட்டார்கள். இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்துசெல்லும்போதும், வரிசையில் காத்திருக்கும் சில நிமிடங்களிலும் கூட செல்போன்களிலேயே சிறைபட்டுக் கிடக்கிறார்கள்.

தங்களைத் தாண்டி ஓர் உலகம் இயங்கிக்கொண்டிருப்பதையே உணராமல், போனில் புதைந்திருக்கிறார்கள்.

வாட்ஸ்அப், பேஸ்புக் பார்க்க, கேம் விளையாட, ஸ்கோர் அறிய... இன்னும் இன்னும் எண்ணற்ற காரணங்களால் பலரும் ஸ்மார்ட்போனின் சின்னத்திரையையே வெறித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இது எல்லாம் எதில் கொண்டுபோய் விடும்? நிச்சயமாக நல்ல விளைவை ஏற்படுத்தாது. அதிகபட்ச ஸ்மார்ட்போன் பயன்பாடு, மனநலத்தைப் பாதிக்கும் என்று பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

ஸ்மார்ட்போன் ஆப்கள் எல்லாம், பயனாளர்களை எப்போதும் அதில் ஆழ்ந்திருக்கச் செய்யும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன என்று கூகுள் நிறுவனத்தின் முன்னாள் வடிவமைப்பு நெறிமுறையாளர் டிரிஸ்டன் ஹாரிஸ் கூறுகிறார்.

“மற்ற வகையில் நார்மலாக உள்ள, ஆனால் அதிக ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக செவித்திறன் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளை நாங்கள் தற்போது அதிகம் எதிர்கொள்கிறோம்” என்று காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரான சஞ்சய் சச்தேவா கூறுகிறார்.

“இன்று நாம் மின்னணுச் சாதனங்கள் ஏற்படுத்தும் பரபரப்பு, ஓசையால் எப்போதும் சூழப்பட்டிருக்கிறோம். இதன் காரணமாக, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் வேறு எந்த உடல்ரீதியான பிரச்சினை இல்லாதவர்களுக்கும் புரிந்துகொள்ள முடியாத புதிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்துக்கொள்வது, பயன்படுத்தாதபோது ஸ்மார்ட்போன், சார்ஜரை தங்களைவிட்டுத் தள்ளிவைப்பது போன்ற அடிப்படையான முன்னெச்சரிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்று சஞ்சய் கூறுகிறார்.



தொடர்ந்து ஸ்மார்ட்போன் திரையில், அதன் நுண்ணெழுத்துகளில் ஆழ்ந்திருப்பதால், கண்ணில் வலி, எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. இது போன்ற எச்சரிக்கைகளையும் மீறி எப்போதும் ஸ்மார்ட்போனில் மூழ்கியிருப்பது நாளடைவில் பார்வைத்திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. யோசித்துப் பாருங்கள், முன்பெல்லாம் கண்ணாடி போட்ட இத்தனை இளைஞர்கள், இளம்பெண்களை பார்த்திருக்கிறீர்களா?

“10 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களிடம் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தற்போது தெளிவாகத் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. அதிகமான ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக திடீரென கோபத்தில் வெடிப்பது, எதிர்பாராத செயலைச் செய்வது எல்லாம் அவர்களிடம் அதிகம் காணப்படுகின்றன. முன்பு இதுபோன்ற நிலை அதிகம் காணப்பட்டதில்லை” என்று மனோவியல் நிபுணர் உதிஷ்டா ராம் கூறுகிறார்.

இன்று இந்தியா உலகில் வேகமாக வளர்ந்துவரும் டிஜிட்டல் பொருளாதார நாடுகளில் ஒன்று. உலகில் இரண்டாவது அதிகமான ஸ்மார்ட்போன் மற்றும் இணையப் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடு இந்தியாதான். 2022-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் செல்போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை நூறு கோடியைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது.

இப்படி டிஜிட்டல் யுகத்தில் நாம் அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கையில், அவ்வப்போது கொஞ்சம் ‘பிரேக்’கிலும் கவனம் வைப்பது நல்லது. இல்லாவிட்டால், விபத்து நேர்வதைத் தவிர்க்க முடியாது.

சரி, ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவது எப்படி? அதற்கு நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்...

கொஞ்சநேரம் விலகியிருங்கள்

இன்று பலரும் இணையம் சார்ந்தே பணிபுரிய வேண்டியிருக்கிறது. அதைத் தவிர்க்க முடியாது என்றபோதும், குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் உங்கள் உடம்பையும் மனதையும் இணைய உலகை விட்டு விலக்கி வைப்பது நல்லது. அந்த நேரத்தில், உங்கள் செல்போனில் ‘நோட்டிபிகேஷன்’ மற்றும் ‘அலெர்ட்’டையும் அணைத்துவிடுவது நல்லது.

கட்டுப்பாட்டுக்கு உதவும் ‘ஆப்’

ஸ்மார்ட்போனை அணைப்பதில் சுயகட்டுப்பாட்டைப் பின்பற்ற முடியவில்லையா? அதற்கு உதவவும் ‘ஆப்’கள் வந்துவிட்டன. குறிப்பிட்ட ‘ஆப்’பில் நீங்கள் எவ்வளவு நேரத்தைச் செலவிடலாம் என்று இந்த ‘ஆப்’கள் ஆலோசனை சொல்லும். நீங்கள் ஸ்மார்ட்போன் திரையைப் பார்ப்பதைக் கட்டுப்படுத்திக்கொள்ள உங்களுக்கு நீங்களே விதிகளை ஏற்படுத்திக்கொள்ளவும் சில ‘ஆப்’கள் அனுமதிக்கின்றன.

வண்ணம் கலையட்டும்

ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அப்புறம், ஸ்கிரீன் வண்ணமயத்தில் இருந்து கருப்பு-வெள்ளைக்கு மாறும் வகையில் ‘செட்’ செய்யலாம். அது ஸ்மார்ட்போன் பயன்பாட்டு ஆர்வத்தைக் குறைக்கும்.

அடிமைப்படுத்தும் ‘ஆப்’களை துறந்திடுங்கள்


யோசித்துப் பார்த்தால், சமூக வலைதளங்களும், கேம்களும்தான் உங்கள் ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்துக்கு பிரதான காரணம் என்பது புரியும். அந்த மாதிரியான ‘ஆப்’களை உங்கள் போனில் இருந்து ‘அன்இன்ஸ்டால்’ செய்வது நலம் பயக்கும்- குறைந்தபட்சம் சிறிது காலத்துக்காவது. நீங்கள் ஒரு நாளில் ஒன்றிரண்டு முறை பேஸ்புக், டுவிட்டர் போவது தவறல்ல. ஒவ்வொரு நிமிடமும் அவற்றைப் பரிசோதித்துக்கொண்டே இருப்பதுதான் தீது.

தூங்கும் முன்...

தூங்கத் தயாராவதற்கு வெகு நேரத்துக்கு முன்பே ஸ்மார்ட்போன்களுக்கு விடைகொடுத்து விடுவது நல்லது. ‘தூங்கும் முன் ஒரு 5 நிமிடம் பார்த்துவிட்டு அணைத்துவிடலாம்’ என்றுதான் நாம் போனை தீண்டத் தொடங்குகிறோம். ஆனால் அப்படியே நேரம் கரைந்து கரைந்து, பல மணி நேரம் பறந்துவிடுகிறது. தூக்க நேரமும் வெகுவாகக் கொள்ளையடிக்கப்பட்டு விடுகிறது. எனவே, படுக்கையில் இருந்து கையால் எட்டி எடுக்க முடியாத தூரத்தில் போனை வைப்பது நல்லது. போனில் அலாரம் வைக்காமல், தனி அலாரம் கடிகாரத்தைப் பயன்படுத்தலாம். அதனால், கண் விழித்ததும் ஸ்மார்ட்போனை கையில் எடுப்பது தவிர்க்கப்படும்.

சாதாரண போனை உபயோகிக்கலாம்

இன்றைக்கு ஸ்மார்ட்போன்களில் எண்ணற்ற விஷயங்கள் இருப்பதால், ஏதாவது ஒரு வகையில் அவை நம்மை கொக்கி போட்டு உள்ளிழுத்துவிடுகின்றன. இந்நிலையில், அடிப்படையான தொடர்பு விஷயங்களுக்கு மட்டும் உதவும் ஓர் எளிய போனை உபயோகிப்பது மோசமான விஷயமல்ல. அப்படிச் சில நாட்கள் உபயோகித்துத்தான் பாருங்களேன், உங்களின் ஸ்மார்ட்போன் அடிமைத்தனம் வெகுவாக விலகியிருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஸ்மார்ட்போன் அடிமைத்தனம் நமக்கு இருக்கிறது என்று நமக்குள்ளாவது ஒப்புக்கொள்ள வேண்டும், அதிலிருந்து மீள வேண்டும் என்று உளமார விரும்ப வேண்டும்.

மனிதர்களுக்கு இடையிலான பரஸ்பர தொடர்புக்குத்தான் ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவையே மனிதர்களைப் பிரிப்பது, விந்தையான முரண்பாடுதானே?

Next Story