தடைக்காலம் முடிந்த பின்பு கடலுக்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்ப தொடங்கின


தடைக்காலம் முடிந்த பின்பு கடலுக்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்ப தொடங்கின
x
தினத்தந்தி 6 Aug 2017 4:30 AM IST (Updated: 5 Aug 2017 10:42 PM IST)
t-max-icont-min-icon

தடைக்காலம் முடிந்த பின்பு கடலுக்கு சென்ற விசைப்படகுகள் ஏராளமான மீன்களுடன் கரை திரும்ப தொடங்கின. இதையடுத்து குளச்சல் மீன்பிடி துறைமுகம் களை கட்டியது.

குளச்சல்,

ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விசை படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி முதல், ஜூலை 31–ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இந்த காலக்கட்டத்தில் குளச்சல் பகுதியில் உள்ள சுமார் 300 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்களின் விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 31–ந் தேதி மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையொட்டி அன்று நள்ளிரவு முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தொடங்கின. பொதுவாக குளச்சலில் இருந்து கடலுக்கு புறப்பட்டு செல்லும் விசைப்படகுகள் 10 முதல் 15 நாட்கள் வரை கடலில் தங்கி இருந்து மீன்பிடித்து கரை திரும்புவார்கள்.

கரை திரும்ப தொடங்கின

ஆனால், தற்போது கடந்த 31–ந் தேதி நள்ளிரவு கடலுக்கு புறப்பட்டு சென்ற விசைப்படகுகளில் பெரும்பாலான படகுகள் நேற்று அதிகாலையிலேயே கரை திரும்ப தொடங்கின. இந்த படகுகளில் ஏராளமான மீன்கள் இருந்தன. குறிப்பாக, கணவாய், நாக்கண்டம், நவரை, கொழிசாளை, கிளிமீன் போன்றவை அதிகம் காணப்பட்டன. விசைப்படகுகள் துறைமுகம் வந்ததும் அந்த மீன்கள் ஏலக்கூடத்திற்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது.

அவற்றை கேரள வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர். இதற்காக நேற்று அதிகாலை முதல் குளச்சலில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மீன்களை வாங்கியதும் வியாபாரிகள் அதனை பாதுகாப்பாக வாகனங்களில் எடுத்து சென்றனர். இதனால், கடந்த 2 மாதமாக களை இழந்து காணப்பட்ட குளச்சல் மீன்பிடி துறைமுகம் நேற்று களை கட்டியது. ஏராளமான தொழிலாளர்கள் மீண்டும் வேலை கிடைத்த மகிழ்ச்சியில் மீன் மார்க்கெட்டை வலம் வந்தனர்.


Related Tags :
Next Story