வாகன ஆவணங்கள் சரிபார்த்தல் முகாம் நாளை தொடங்குகிறது


வாகன ஆவணங்கள் சரிபார்த்தல் முகாம் நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 6 Aug 2017 3:45 AM IST (Updated: 6 Aug 2017 12:09 AM IST)
t-max-icont-min-icon

மணல் இணைய சேவையில் பதிவு முறைகேடுகளை தவிர்க்க வாகன ஆவணங்கள் சரிபார்த்தல் முகாம் நாளை தொடங்குகிறது.

விழுப்புரம்,

தமிழக அரசின் மணல் இணைய சேவையில் மேற்கொள்ளப்படும் வாகன பதிவுகளில் எழும் முறைகேடான பதிவுகளை தவிர்க்கும் பொருட்டு வாகன ஆவணங் களை சரிபார்த்தலுக்கான சிறப்பு முகாம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை (7-ந் தேதி) முதல் தொடங்கி 11-ந் தேதி வரை நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை வட்டார போக்குவரத்து அலுவலர்களால் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. வாகன உரிமையாளர்கள் www.tnsand.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் வாகனத்தின் நடப்பில் உள்ள வாகன பதிவு புத்தக விவரம் (ஆர்.சி. புத்தகம்), வாகன அனுமதிச்சான்று, வாகன தகுதிச்சான்று, சாலை வரி ரசீது மற்றும் காப்பீடு விவரங்கள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்படும் படிவத்துடன் முகாமிற்கு வர வேண்டும்.

பதிவேற்றிய ஆவணங்களுக்கான அசல் சான்றுகளை அவற்றுக்கான நகல்களுடன் சிறப்பு முகாமில் காண்பித்து சரிபார்த்துக்கொள்ளலாம். இந்த முகாமானது வாகன பதிவுகளை ஒழுங்குப்படுத்த நடைபெறுகிறது. முகாமிற்கு வாகனங்களை கொண்டு வர வேண்டாம். முகாமில் ஆவணங்கள் சரிபார்ப்பு மேற்கொள்ளும் வாகனங்கள் மட்டுமே இணையதள மணல் சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் தவறான ஆவணங்கள் கொண்ட வாகனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story