வள்ளியூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி


வள்ளியூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 6 Aug 2017 2:00 AM IST (Updated: 6 Aug 2017 12:16 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

வள்ளியூர்,

வள்ளியூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

தொழிலாளிகள்

நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள கீழகோடன்குளத்தை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 65). அதே பகுதியை சேர்ந்த பால்துரை மனைவி அமிர்தகனி (55). இவர்கள் இருவரும் விவசாய கூலி தொழிலாளிகள். மேலும் ஆடு, மாடுகளும் வளர்த்து வந்தனர்.

தற்போது கடும் வறட்சி நிலவுவதால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கால்நடைகளுக்கு புல் அறுத்து வருவதற்காக டிராக்டரில் இவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதிக்கு சென்றனர்.

லாரி மோதி சாவு

அங்கு புல் அறுத்து டிராக்டரில் ஏற்றிக் கொண்டு நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். டிராக்டரை கீழகோடன்குளத்தை சேர்ந்த ஆனந்த்ராஜ் (30) ஓட்டினார். பால்பாண்டி, அமிர்தகனி ஆகிய இருவரும் டிராக்டரில் புல் கட்டுகளின் மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

டிராக்டர் வள்ளியூர் புறவழிச்சாலையில் கோவனேரி பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டிராக்டருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக டிராக்டரின் பின்பகுதியில் மோதியது. இதில் டிராக்டரில் புல் கட்டுகளின் மீது அமர்ந்து வந்த பால்பாண்டி, அமிர்தகனி ஆகிய இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

போலீசார் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான நாமக்கல்லை சேர்ந்த செல்வம் (42) என்பவரை கைது செய்தனர்.

கால்நடைகளுக்கு புல் அறுத்துக் கொண்டு ஊருக்கு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் கீழகோடன்குளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story