திருமங்கலம் பகுதியில் பருத்தி விதை தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதி


திருமங்கலம் பகுதியில் பருத்தி விதை தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதி
x
தினத்தந்தி 6 Aug 2017 4:00 AM IST (Updated: 6 Aug 2017 12:57 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் பகுதியில் பருத்தி விதை தட்டுப்பாட்டால், மானாவாரி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்ற னர்.

திருமங்கலம்,

திருமங்கலம் தாலுகாவில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் நிலத்தை உழுது மானாவாரி விதைகள் விதைத்து வருகின்றனர். கள்ளிக்குடி, திருமங்கலம் ஒன்றியங்களில் சோளம், மற்றும் சிறுதானியம் உள்ளிட்ட பயிர்களுக்கான விதைகளை வாங்கி விதைக்க தொடங்கி உள்ளனர். பொதுவாக மானவாரிநிலங்களில் பயறு வகைகள் விதைத்தாலும், தனியாகவோ அல்லது ஊடுபயிராகவோ பருத்தியை விவசாயிகள் விதைப்பது வழக்கம்.

தற்போது இந்த பகுதியில் பருத்திவிதை கிடைக்கவில்லை. இதனால் இந்த பகுதி விவசாயிகள் அருகில் உள்ள விருதுநகர் மாவட்டத்திற்கு சென்று பருத்திவிதை வாங்கி வருகின்றனர். இதுகுறித்து திருமங்கலம் பகுதி விவசாயிகள் கூறியதாவது:- சில வருடங்களுக்கு பின்பு இந்த வருடம் ஆடிப்பட்டத்தில் மழை பெய்துள்ளது.

இந்த கால நிலையில் மானாவாரி விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும். ஆனால் ஊடு பயிராக விதைக்கக் கூடிய பருத்தி விதைக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள மாவட்டத்திற்கு சென்று விதை வாங்கி வருவதென்றால் அதற்கான செலவுகள் பலமடங்கு ஆகிறது. இதனால் விவசாய பணிகள் கடும் பாதிப்படைந்து உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி விவசாய இடுபொருள் மற்றும் விதை விற்பனையாளர்கள் கூறியதாவது:-திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூர், டி.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் பருத்தி விதை மட்டும் 80 ஆயிரம் கிலோ விற்பனையாகும். ஆனால் தற்போது விதை கையிருப்பு இல்லை. விதை ஆய்வாளர்களின் கடுமையான கெடுபிடியால் பருத்தி விதையை வியாபரிகள் விற்பனை செய்யவில்லை.

தற்போது பருத்தி விதை உற்பத்தியாளர்கள் கிடையாது. எனவே தான் பருத்தி விதை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சேலம், ஆத்தூரில் விதை கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் விலை 450 கிராம் எடையுள்ள விதை ரூ.800-க்கு விற்பதாக கூறப்படுகிறது. நாட்டுப்பருத்தி விதை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் பருத்தி விதை கிடைக்காமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story