குடிநீர் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்


குடிநீர் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும அ.தி.மு.க., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
x
தினத்தந்தி 6 Aug 2017 3:45 AM IST (Updated: 6 Aug 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சுப்பிரமணியனும், தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனும் போட்டி போட்டு குரல் கொடுத்து வருகின்றனர்.

ராஜபாளையம்,

வரலாறு காணாத வறட்சியால் ராஜபாளையம் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பெரும் சிரமத்தை பொதுமக்கள் சந்தித்து வரும் நிலையில் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.யான சுப்பிரமணியனும், ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.யான தங்கப்பாண்டியனும் இந்த பிரச்சினைக்காக போட்டி போட்டு நடவடிக்கை எடுப்பதோடு அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினரான சுப்பிரமணியன் ராஜபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரப்பட்டி, முறம்பு, முதுகுடி, கோபால புரம், ராமலிங்காபுரம், கீழராஜகுலராமன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனது சாத்தூர் தொகுதியின் கீழ் உள்ள அனைத்து கிராமப் புறங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்கவும் மற்றும் தேவையான அடிப்படை வசதி களை தடையின்றி விரைந்து செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்.

தற்போது ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சிஅதிகாரி சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை அவர் நடத்தினார். அப்போது கிராமப்புறங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்கவும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை விரைந்து முடிப்பதற்காகவும் நடந்து முடிந்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் தொகுதி மேம்பாட்டு நிதியினை முதல்-அமைச்சர் உயர்த்தியுள்ளார். எனவே அடிப்படை பணிகளை தடையின்றி விரைந்து முடிப்பதற்காக அதிக நிதி ஒதுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இது ஒரு புறம் இருக்க தி.மு.க.வை சேர்ந்தவரான தங்கப்பாண்டியன் தனது தொகுதியான ராஜபாளையத்தில் குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

சென்னையில் உயர் அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி வருகிறார்.
சமீபத்தில் அவர் கலெக்டர் சிவஞானத்திடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது‘:-

ராஜபாளையம் தொகுதியில் வரலாறு காணாத அளவு தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் பொதுமக்கள் தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். ராஜபாளையம் நகராட்சி மூலம் 25 நாளுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. அக்குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்து வதன் மூலம் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

இதனால் வாரம் ஒருமுறை என்ற அளவில் குடிநீர் வழங்க வேண்டும். ராஜபாளையம் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வாகனம் மூலமாக குடிதண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பல ஆழ்குழாய் கிணறுகளில் தொட்டி கள் இருந்தும், பராமரிப்பு இன்றியும் மோட்டார்கள் பழுதடைந்தும் உள்ளதால் அவை செயல்படாமல் உள்ளன. அவற்றை பழுது நீக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். தொகுதி யில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளதாக தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக நகராட்சி ஆணையர் சசிகலாவையும் சந்தித்து பேசியுள்ளார். மொத்தத்தில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் போட்டிபோட்டு செயல்படுகின்றனர்.

சாத்தூர் தொகுதியில் அடங்கியுள்ள ஒரு கிராமத்தில் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.யால் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டால் அதை அடுத்துள்ள ராஜபாளையம் தொகுதி பகுதியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.யால் குடிநீர் பிரச்சினைக்காக நடவடிக்கை எடுக்கப்படுவது பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

Next Story