கோவை மண்டலத்தில் ஆன்லைனில் கணக்குகளை தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு


கோவை மண்டலத்தில் ஆன்லைனில் கணக்குகளை தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2017 3:45 AM IST (Updated: 6 Aug 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

கோவை மண்டலத்தில் ஆன்லைனில் கணக்குகளை தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரி கூறினார்.

கோவை,

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் சம்பளதாரர்கள், தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லாத சிறிய வியாபாரிகள், எல்.ஐ.சி., முகவர்கள், கமிஷன் ஏஜெண்டுகள் போன்றவர்கள் 2016-2017-ம் நிதி ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த 31-ந் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை 5-ந் தேதிக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று கோவை ரேஸ்கோர்சில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு ஏராளமானவர்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் வருமான வரி கணக்குகளை உரிய படிவங்களில் பூர்த்தி செய்து தாக்கல் செய்தனர். அதற்கு உதவி செய்வதற்காக வருமான வரித்துறை சார்பில் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதலாக கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆன்லைனில் தாக்கல் செய்பவர்கள் அதிகரிப்பு
இதுகுறித்து கோவை வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்துக்குட்பட்ட வருமான வரித்துறை அலுவலகங்களில் வருமான வரிகணக்குகளை தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன்படி கோவை ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்தில் பலர் நேரில் வந்து கணக்குகளை தாக்கல் செய்தனர்.
பொதுமக்கள் கணக்குகளை தாக்கல் செய்வதற்கு வசதியாக விடுமுறை தினமான நேற்று அலுவலர்கள் அனைவரும் பணியில் இருந்தனர்.
தற்போது கோவை மண்டலத்தில் நேரில் வந்து கணக்கு தாக்கல் செய்பவர்களை விட ஆன்லைனில் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை தான் அதிகம். மேலும் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக ஆன்லைனில் தான் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே முன்புபோல நேரிடையாக வந்து வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்பவர்கள் குறைவு தான்.

கோவை அலுவலகத்தில் கடைசி நாளான நேற்று ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் தான் கணக்குகளை தாக்கல் செய்தனர்.
ஆன்லைனில் கணக்குகளை தாக்கல் செய்பவர்கள் எத்தனை பேர் என்று எங்களால் கணக்கிட முடியாது. இதற்கு காரணம் கணக்கு தாக்கல் செய்தவுடன் அதுபற்றிய விவரங்கள் பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு சென்று விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story