கமல்ஹாசன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கியவர் கைது


கமல்ஹாசன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கியவர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2017 5:45 AM IST (Updated: 6 Aug 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் கமல்ஹாசன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, உயிரோடு இருக்கும் ஒருவரை விபத்தில் இறந்து போனதாக புகைப்படத்துடன் பதிவு செய்த நில புரோக்கர் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அந்த பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு உக்கடம் அல்-அமீன் காலனியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் மன்சூர்அலி(வயது 42) என்பவர் நிலம் வாங்கி கொடுத்தார். இதில் கமிஷன் தொடர்பாக ரவிக்கும், மன்சூர் அலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் பணம் தர வேண்டும் என்று ரவியை, மன்சூர் அலி மிரட்டி வந்தார்.

இந்த நிலையில் ரவி கோவையில் நடைபெற்ற விபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டார் என்று அவரது புகைப்படத்துடன் முகநூலில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. ரவியின் மகளான 8 வயது சிறுமியும் மாயமாகிவிட்டார் என்றும், அவரை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்பில் சிறுமியின் புகைப்படத்துடன் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது.

இதை பார்த்த ஏராளமானவர்கள், ரவியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்தனர். மேலும் ரவிக்கும் போன் செய்து விசாரித்தனர். அப்போதுதான் ரவிக்கு இந்த தகவல் தெரிய வந்தது. அவரும் முகநூலை பார்த்தார். தனது குழந்தை மாயமாகி இருப்பதாக வாட்ஸ்-அப்பில் வெளியான தகவலையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அந்த முகநூல் கணக்கு நடிகர் கமல்ஹாசனின் பெயரில், கமல்ஹாசன் படத்துடன் போலியாக உருவாக்கப்பட்டு இருந்தது. இது குறித்து ரவி, கோவை நகர சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி கமிஷனர் ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர் மல்லிகா ஆகியோர் இது குறித்து விசாரணை நடத்தினார்கள்.

நில புரோக்கர் மன்சூர்அலிதான், நடிகர் கமல்ஹாசன் பெயரில் போலி முகநூல் கணக்கை தொடங்கி இதுபோன்ற தவறான தகவலை பரப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு மன்சூர் அலி கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப குற்ற தடுப்பு சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுபோன்று போலியான பெயரில் முகநூலில் கணக்கு தொடங்கி பொய்யான தகவலை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை சைபர் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Next Story