சரக்கு-சேவை வரியால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது


சரக்கு-சேவை வரியால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது
x
தினத்தந்தி 6 Aug 2017 4:15 AM IST (Updated: 6 Aug 2017 1:42 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு மற்றும் சேவை வரியால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் மிட்டல் கூறினார்.

நாமக்கல்,

தென்னிந்திய அளவிலான லாரி உரிமையாளர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் மிட்டல் தலைமை தாங்கி பேசினார். இதில் மத்திய அரசு கொண்டு வந்து உள்ள சரக்கு மற்றும் சேவை வரியால் லாரி உரிமையாளர்களுக்கு ஏற்படும் தீமைகள் மற்றும் நன்மைகள் குறித்து ஆடிட்டர் கோத்தாரி விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் மிட்டல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகும் லாரிகளில் கூடுதல் சுமை ஏற்றப்படுகிறது. இதை தடுக்க சுங்கசாவடிகளில் 10 மடங்கு கூடுதல் கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் லாரி உரிமையாளர்களுக்குதான் பாதிப்பு. சுமை ஏற்றி விடும் இடத்திலேயோ அல்லது சோதனை சாவடிகளிலேயோ அதிகாரிகள் மூலம் கண்காணித்து, நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டுமே சுமை ஏற்றிச்செல்ல மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லாரிகளில் அனைத்து விதமான ஆவணங்களையும் எடுத்து சென்றாலும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் ஏதாவது காரணம் கூறி அபராதம் விதிக்கின்றனர் அல்லது பணம் வசூல் செய்கின்றனர். அதிகாரிகளின் இத்தகைய அத்துமீறல்கள், முறைகேடுகளை தடுக்க மாநில அரசுகள் குழுக்களை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரியால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. உற்பத்தி பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்லும் லாரி உரிமையாளர்கள் எதற்காக வரி செலுத்த வேண்டும். மேலும் சரக்கு மற்றும் சேவை வரி ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு விதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. லாரி உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் உள்ளனர். இதை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

இதேபோல் சுங்க கட்டணம் நிர்ணயம் செய்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எனவே, இந்தியா முழுவதும் ஒரே சீரான சுங்க கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் 22லட்சம் கனரக வாகன ஓட்டுனர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு கனரக ஓட்டுனர் உரிமம் பெற 10-ம் வகுப்பு அல்லது பிளஸ்-2 படித்திருக்க வேண்டும் என அறிவித்து உள்ளது. ஓட்டுனர் வேலை என்பது திறன் சார்ந்தது, லாரி தொழிலில் உள்ள ஆட்கள் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான சட்ட விதிகளை மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு உள்ளிட்ட லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து நடைபெற உள்ள அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாக குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நடந்த கூட்டத்தில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் துணை தலைவர்கள் சபரீஸ் அகர்வால், சுப்பிரமணியம், அகில இந்திய பொருள் போக்குவரத்து சம்மேளன தலைவர் சென்னாரெட்டி, பொதுச்செயலாளர் ராஜேந்திரசிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார், சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் நல்லதம்பி, அகில இந்திய டிரைவர்கள் சங்க துணை தலைவர் குப்புசாமி மற்றும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story