பொள்ளாச்சி அருகே ஆஸ்பத்திரி நடத்தி வந்த போலி பெண் டாக்டர் கைது


பொள்ளாச்சி அருகே ஆஸ்பத்திரி நடத்தி வந்த போலி பெண் டாக்டர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2017 5:15 AM IST (Updated: 6 Aug 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே ஆஸ்பத்திரி நடத்தி வந்த போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோமங்கலத்தில் முருகன் ஆஸ்பத்திரி என்ற பெயரில் போலி பெண் டாக்டர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை தொடர்ந்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சந்திரசேகரன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணன் கோமங்கலத்தில் உள்ள முருகன் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர் தாராபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி லதா (வயது 60) என்பதும், 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு டாக்டர் என்ற பெயரில் சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவர் போலி டாக்டர் என்பதை அறிந்ததும், தாங்கள் வாங்கிய மாத்திரைகளை திரும்ப ஒப்படைத்து விட்டு, அதற்குரிய பணத்தை திருப்பி கேட்டனர். இதனால் அந்த போலி பெண் டாக்டர் லதாவுக்கும், நோயாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் விசாரணை நடத்த வந்த கண்காணிப்பாளர் கண்ணனிடமும், லதா, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கோமங்கலம் போலீஸ் நிலையத்தில் இருந்து பெண் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

போலி பெண் டாக்டர் பிடிபட்ட தகவல் பரவியதை தொடர்ந்து கிளினிக் முன் பொதுமக்கள் திரண்டனர். போலீசார் போலி டாக்டர் லதாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணன் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லதாவை கைது செய்தனர்.
பின்னர் டாக்டர் கண்ணன் கூறியதாவது:-

பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் கோமங்கலத்தில் உள்ள முருகன் ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த லதா என்ற பெண், மருத்துவ படிப்பு எதுவும் படிக்காமல் நோயாளிகளுக்கு அலோபதி (ஆங்கில) மருந்துகள் கொடுத்து வந்துள்ளார். மேலும் உயிருக்கு ஆபத்தான மருந்துகளை ஊசி மூலம் நரம்பில் போட்டு உள்ளார்.

மேலும் அவர் சித்த மருத்துவம் படித்து உள்ளதாக கூறினார். ஆனால் அதற்கான எந்த சான்றிதழ்களும் இல்லை. விசாரணையில் அவர் 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். மேலும் சித்த மருத்துவம் படித்தவர்கள் ஆங்கில மருந்துகள், ஊசிகள் பயன்படுத்த கூடாது. ஆனால் அவர் நடத்தி வந்த ஆஸ்பத்திரியில் இருந்து குளுக்கோஸ் பாட்டில், ஊசி, ஆங்கில மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதுபோன்று போலி டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, தற்போது கைதாகி உள்ள போலி பெண் டாக்டர் லதா ஒரு மாதமாக கோமங்கலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இதற்கு முன் கூளநாயக்கன்பட்டியில் சிகிச்சை அளித்து இருக்கிறார். அங்கு பொதுமக்களிடம் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து கோமங்கலத்துக்கு வந்துள்ளார்.தற்போது அவர் உடுமலை அருகே போடிபட்டி காமராஜர் நகரில் வசித்து வருகிறார் என்றனர்.

பின்னர் கைதான போலி பெண் டாக்டர் லதாவை போலீசார் பொள்ளாச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story