தெப்பக்காடு முகாமில் குட்டி யானையை குளிரில் இருந்து காப்பாற்ற சிறப்பு வசதிகள்


தெப்பக்காடு முகாமில்  குட்டி யானையை குளிரில் இருந்து காப்பாற்ற சிறப்பு வசதிகள்
x
தினத்தந்தி 6 Aug 2017 4:15 AM IST (Updated: 6 Aug 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

தெப்பக்காடு முகாமில் பராமரிக்கப்படும் குட்டி யானையை குளிரில் இருந்து காப்பாற்ற சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. அந்த யானைக்கு மெத்தை போடப்பட்டு, வெப்பமூட்டும் கருவிகளும் வைக்கப்பட்டு உள்ளன.

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 23 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் தாயை பிரிந்து தவித்த 11 மாத ஆண் குட்டி யானை கடந்த மாதம் தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு வரபட்டது.

மறுவாழ்வு மற்றும் பராமரிப்பு பணிக்காக கொண்டு வரபட்ட இந்த யானை குட்டி வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள கிரால் எனப்படும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. குட்டி யானைக்கு உணவு கொடுத்து பாகன்கள் கண்காணித்து வருகிறார்கள்.

அந்த குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை கால்நடை மருத்துவர் விஜய ராகவன் அளித்து வருகிறார். தற்போது அந்த யானை குட்டி உடல் நலத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக முதுமலை புலிகள் காப்பகத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கடுங்குளிர் நிலவி வருகிறது.

கடுங்குளிர் காரணமாக குட்டி யானையின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் குட்டி யானை குளிரின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அதற்கு படுக்க வைக்கோல் புல் கொண்டு மெத்தை தயாரிக்கப்பட்டு தரையில் போடப்பட்டு உள்ளது. மேலும், மரக்கூண்டில் வெப்பம் சீராக இருக்க 2 வெப்ப மூட்டும் (ஹீட்டர்) கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன. முதுமலை பலிகள் காப்பக உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கால்நடை மருத்துவர் மற்றும் பாகன்கள் குட்டி யானைக்கு இந்த சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Next Story