அவினாசியில் மொபட் மீது பஸ் மோதிய விபத்தல் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் பலி


அவினாசியில் மொபட் மீது பஸ் மோதிய விபத்தல் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் பலி
x
தினத்தந்தி 6 Aug 2017 4:30 AM IST (Updated: 6 Aug 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார். 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

அவினாசி,

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி நேற்று காலை 11 மணி அளவில் ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த சிவராஜ் என்பவர் ஓட்டிவந்தார். பஸ் அவினாசி கால்நடை மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது அன்னூரில் இருந்து திருப்பூர் நோக்கி ஒரு மொபட் வந்து கொண்டிருந்தது. அந்த மொபட்டை அன்னூர் சென்னப்பசெட்டி பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி (வயது 74) என்பவர் ஓட்டி வந்தார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் லைன் மேனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கால்நடை மருத்துவமனை அருகே இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை நோக்கி ரங்கசாமி திரும்ப முயன்றபோது அந்த பஸ் எதிர்பாராதவிதமாக ரங்கசாமி மொபட் மீது மோதியது. அத்துடன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மொபட்டில் வந்த ரங்கசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதன் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அத்துடன் விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஊட்டியை சேர்ந்த மணிகண்டன் (4), பந்தலூரை சேர்ந்த ராஜலட்சுமி (62), கோத்தகிரியை சேர்ந்த பெல்லான் (61), ஊட்டியை சேர்ந்த ரஞ்சினி (20), கருவலூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த விஜயகுமார் (40), அம்மாபாளையத்தை சேர்ந்த மல்லிகா (36), கமால் (55) உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து காரணமாக அவினாசி-கோவை மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அவினாசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றனர். இதில் மணிகண்டன், விஜயகுமார், ராஜலட்சுமி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story