சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியது: 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல்நசுங்கி சாவு
டி.நரசிப்புரா அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
மைசூரு,
டி.நரசிப்புரா அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் காய்கறி வியாபாரிகள் ஆவார்கள்.
சரக்கு ஆட்டோ– லாரி மோதல்மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா அருகே உள்ள கெம்பலியண்ணா உண்டி கிராமத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஒரு சரக்கு ஆட்டோ சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே மைசூருவில் இருந்து டி.நரசிப்புரா நோக்கி வந்த ஒரு லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்கு ஆட்டோவின் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து சரக்கு ஆட்டோவில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
3 பேர் சாவுஅப்போது இடிபாடுகளில் சிக்கி சரக்கு ஆட்டோவில் இருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. மேலும் 4 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 4 பேரையும், அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக டி.நரசிப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த டி.நரசிப்புரா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 2 பெண்கள் உள்பட 3 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.
காய்கறி வியாபாரிகள்விசாரணையில் இறந்தவர்கள் டி.நரசிப்புரா டவுனை சேர்ந்த காய்கறி வியாபாரிகளான ரகு(வயது 26), பசம்மா(36), மகாதேவம்மா(45) என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்த 4 பேரும் காய்கறி வியாபாரிகள் தான். ஆனால் அவர்களின் பெயர்கள் உடனடியாக தெரியவில்லை.
இவர்கள் அனைவரும் டி.நரசிப்புராவில் இருந்து மைசூருவுக்கு சரக்கு ஆட்டோவில் சென்று காய்கறி வாங்க சென்றதும், அப்போது சரக்கு ஆட்டோ விபத்தில் சிக்கி 3 பேர் இறந்ததும், 4 பேர் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இறந்து போன 3 பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் அதே அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
டிரைவருக்கு வலைவீச்சுமுன்னதாக விபத்து நடந்ததும் லாரி டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து டி.நரசிப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரையும் வலைவீசி தேடிவருகின்றனர். விபத்தில் காய்கறி வியாபாரிகளான 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் டி.நரசிப்புராவில் சோகத்தை ஏற்படுத்தியது.