சென்னையை குளிர்வித்த மழை; மக்கள் மகிழ்ச்சி இன்றும் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்


சென்னையை குளிர்வித்த மழை; மக்கள் மகிழ்ச்சி இன்றும் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 6 Aug 2017 6:00 AM IST (Updated: 6 Aug 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இன்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் பரவலாக வறட்சியும், கடுமையான குடிநீர் பஞ்சமும் நிலவி வருகிறது. சென்னையை பொறுத்தமட்டில், சமீப காலமாக கோடை காலத்துக்கு நிகரான வெயில் வாட்டி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் மழைக்காக ஏங்கி வருகின்றனர்.

இப்படி ஆவலாய் காத்திருக்கும் மக்களுக்கு ஒரு நற்செய்தியாக, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

ஒரு மணி நேரம் பெய்தது

அதன்படி, சென்னையில் நேற்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்தது. எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், பாரிமுனை, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு, திருவான்மியூர், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இதைப்போல ஆலந்தூர், கிண்டி, மதுரவாயல், குமணன்சாவடி, ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், பட்டாபிராம், மாதவரம், புழல், செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டியது. சுமார் 1 மணி நேரமாக கொட்டித் தீர்த்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மக்கள் மகிழ்ச்சி

எழும்பூரில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை, காந்தி-இர்வின் சாலை, சேத்துப்பட்டு, சைதாப்பேட்டையில் உள்ள சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்துக்குள்ளாயினர்.

இந்த மழையால் சென்னையில் நேற்று வெப்பம் தணிந்து, குளு குளு சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென மழை பெய்து வெப்பம் தணிந்ததால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மிதமான மழை பெய்யும்

இதைப்போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி சின்னக்கல்லாறில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்ததாக வால்பாறையில் 5 செ.மீ., சென்னை, தேவாலா, நடுவட்டம், கடலாடியில் தலா 2 செ.மீ., பேச்சிப்பாறை, ஆர்.எஸ்.மங்கலத்தில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாமல்லபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோவில், ஆப்பூர், அஞ்சூர், வடகால், மாமல்லபுரம், பூஞ்சேரி, தேவனேரி பகுதிகளில் நேற்று மாலை ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருங்குளம் பகுதியில் நேற்று மாலை ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர், மணவாளநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது.

Next Story