இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை: சாலையில் உருண்டு விழுந்த பாறை


இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை: சாலையில் உருண்டு விழுந்த பாறை
x
தினத்தந்தி 6 Aug 2017 3:45 AM IST (Updated: 6 Aug 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக சாலையில் பாறை உருண்டு விழுந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இடுக்கி,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. இதற்கிடையே நேற்று முன்தினம் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மூணாறு, அடிமாலி, தேவிகுளம், வண்டிப்பெரியார், குமுளி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மேலும் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மண்சரிவும் ஏற்பட்டது. தொடுபுழா பகுதியில் 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

மழை காரணமாக அடிமாலியை அடுத்துள்ள பனம்குட்டி பகுதியில் அடிமாலி- குமுளி சாலையில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. நல்ல வேளையாக அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உருண்டு விழுந்ததில் பாறை சிறு, சிறு துண்டுகளாக சிதறின. சாலை முழுக்க கற்கள் கிடந்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறையினரும், நெடுஞ்சாலைத்துறை யினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலையில் கிடந்த கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கற்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.

இதேபோல் அடிமாலி-மூணாறு சாலையில் குஞ்சுதண்ணி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மண்ணை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ள பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்தது. மழை காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், கூடுமானவரை இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story