அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ஈரோடு மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 414 அங்கன்வாடி பணியாளர்கள், 102 குறு அங்கன்வாடி பணியாளர், 484 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு இன சூழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் பூர்த்திசெய்ய பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் www.erode.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து அல்லது வட்டாரங்களில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்.
அங்கன்வாடி பணியில் சேர 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 1.7.2017 அன்று 25 வயது முடிந்து 35 வயதுக்குள் இருக்கவேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் 40 வயதுக்குள் இருக்கவேண்டும். மலைப்பகுதிகளில் உள்ளவர்கள் 8–ம் வகுப்பு தேர்ச்சியும், 20 வயது முதல் 40 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது உச்சவரம்பு 38 ஆகும்.இதேபோல் குறு அங்கன்வாடி பணியாளர் பணியில் சேர 10–ம் வகுப்பு தேர்ச்சியும், அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு எழுத, படிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஈரோடு மாவட்டத்தில் உள்ளவர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 17–ந் தேதி வரை அந்தந்த வட்டாரத்தில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார்.