தென்னை உயர ... பனை உயர...


தென்னை உயர ... பனை உயர...
x
தினத்தந்தி 6 Aug 2017 6:00 PM IST (Updated: 6 Aug 2017 1:57 PM IST)
t-max-icont-min-icon

சின்ன வயதில் எங்கள் கிராமத்திற்குச் செல்லும்போது இன்று ஏ.டி.எம். கவுண்டரில் மக்கள் நிற்பதுபோல ஏரிக்கரைகளில் வரிசையாக நிற்கும் பனை மரங்கள் வியப்பு ஏற்படுத்தும்.

சின்ன வயதில் எங்கள் கிராமத்திற்குச் செல்லும்போது இன்று ஏ.டி.எம். கவுண்டரில் மக்கள் நிற்பதுபோல ஏரிக்கரைகளில் வரிசையாக நிற்கும் பனை மரங்கள் வியப்பு ஏற்படுத்தும்.

விண்ணைத்தொடும் இவற்றை நட்டவர்கள் யார்?, நீருற்றியவர்கள் யார்?, இவற்றின் காய்களைப் பறிப்பவர் யார்? என்று பிஞ்சுக் கேள்விகள் நெஞ்சமெங்கும் தோன்றும்.

இப்போது ‘கைதட்டுபவர் யாரும் இல்லாவிட்டாலும் கடமை ஆற்றுபவர்கள் பனைக்கு இணையானவர்கள்’ என்கிற உண்மை உள்ளத்தில் உரைக்கிறது.

‘வேளாங்கண்ணி’ படத்தில் வரும் இந்த வரிகள் அங்கு முதல்முறை சென்றபோது செவிகளில் எதிரொலித்தன. பரந்த நீலவானத்தை அவற்றின் நெடிய தோற்றம் இன்னும் அழகாக ஆக்கின. அந்தக் காட்சி உள் மனத்தில் ஆழமான தனிமையை அழியாமல் எழுதிச் சென்றது.

கோடைகாலம் வருகிறபோது வாய்க்குள் வழுக்கிக்கொண்டு செல்லும் நுங்கும், சந்தையில் வாங்கி வரும் பனங்கிழங்குகளும், வீட்டின் எதிரே வசித்த மாட்டு வண்டி ஓட்டும் தோழர்கள் உரித்துக்கொடுத்த பனம் பழமும், மின் தடை ஏற்படும்போது இதமாக காற்றை வருடிக் கொடுத்த பனை விசிறியும், பனைமரத்தைப் பார்க்கும்போதெல்லாம் பரவசப்பட வைத்தன.

அந்த வயதில் பனைமரம் நமது தமிழகத்தின் மாநில மரமென்று தெரியாது. ‘எத்தகைய வசதி இல்லாவிட்டாலும் சூழலை வையாமல் வைராக்கியத்தை வளர்த்துக்கொண்டு உயர்ந்து வளர வேண்டும்’ என்கிற குறியீடாக இப்போது பனை எனக்குத் தெரிகிறது.

தமிழ் இலக்கியத்தில் பனை குறித்து பல மேற்கோள்கள். காதலில் தோற்றவர்கள் பனை மட்டைகளை வைத்து மடலேறியதாகக் குறிப்புகள் வருகின்றன.

‘தலைவிலாசம்’ என்கிற பைந்தமிழ் நூல் பனையின் 801 பயன்களைப் பட்டியலிடுகிறது. வடகிழக்கு மலைப்பகுதியான நாகாலாந்து, மணிப்பூர் போன்றவற்றில் மூங்கிலில் அத்தனை பொருட்கள் செய்யும் கலை அவர் களுக்கு அத்துபடி. நம் ஊரிலோ பனை, அதற்கு இல்லை இணை.

நற்றிணைப் பாடல் ஒன்றில் ‘மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விபீடணன் ராமனுக்கு தங்கத்தாலான ஏழு பனை மரங்களை பரிசாகத்தந்ததாக குறிப்புகள் உள்ளன.

தொல்காப்பியத்திலும் பனையைப் பற்றிய பகிர்வு உண்டு. திருக்குற்றால தலபுராணத்தில் ‘சோலையாண் பனையும் வேதக் கதவமும் தொழும்பு கொண்ட வாலையாந் தமிழ்ப்பூஞ் செல்வி’ என்று பனை சிலாகிக்கப்படுகிறது. ‘தாளிப் பனையின் இலை போல மயிர்க்கட்டு’ என்று காரைக்கால் அம்மையார் பாடுகிறார்.

‘பனைமரத்தடியில் பாலைக் குடித்தாலும் கள்ளைக் குடிப்பதாகச் சொல்வார்கள்’ என்றும், ‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’ என்றும் பல பழமொழிகள் நம்மிடம் உண்டு.

தமிழர்களின் வாழ்வோடு ஒன்றாகக் கலந்தவை பனைமரங்கள். அவற்றின் ஓலைகளை வேய்ந்து வெயிலுக்கு இதமாக குடிலமைத்தவர்கள் நம் முன்னோர்கள். நிற்கும்போது நிழல் தராத பனை குடை சாய்ந்த பிறகு குடிலாகி குளிர்தடுக்கும் கூடாரம் ஆகிறது.

பிளந்த பனையின் மரத்தைக் கொண்டு கோவில் தேர்களுக்கு அச்சாணி செய்தனர். வீட்டு உத்திரங்களையும், தூண்களையும் பனையால் நெய்தனர். வரிசையாக ஏரிக்கரையின் மீது அட்டிகை போலவும், குளங்களின் ஓரத்தில் வளையல் போலவும் வளர்ந்திருக்கும் பனைகள் கரைகள் வெள்ளத்தால் அரிக் காமல் காபந்து செய்தன.

வசிப்பதும், புசிப்பதும், ரசிப்பதும் பனைப்பொருட்களாக இருந்ததால்தான் அனைத்து விதமாகவும் பயன்தருபவர்களை ‘பனைத் துணை’ என்று பாராட்டினார் வள்ளுவர்.

வாழையும் பனையும் பாகங்கள்தோறும் பயன்படும் தன்மை கொண்டவை. வாழையோ வாழும் நாள் குறைவு. பனைக்கோ நமக்குப் பின்பும் வாழும் அமரத்துவம். அதிக உபசரிப்பு இன்றி உதவுவது.

திருவத்திபுரம் சிவன் கோவிலில் பனையே தலவிருட்சம். ஞானசம்பந்தர் பாடி அங்கிருக்கும் ஆண் பனையை பெண் பனையாய் மாற்றியதாகக் கூறுவார்கள். அந்தப் பனம் பழத்தை வருகிறவர்களுக்கு பிரசாதமாகத் தருவார்கள். அந்த காலத்திலேயே ‘பால் மாற்றம்’ செய்து மரபணு மாறிய மரத்தை உண்டாக்கியவர் ஞானசம்பந்தர்.

இன்று பனைமரத்தின் பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. 1970-ம் ஆண்டு 18,556 எக்டர் நிலப்பரப்பில் பனைமரங்கள் இருந்தன. எண்ணிக்கையோ 5.96 கோடி. 1992-ம் ஆண்டே அதன் பரப்பு 10,442 ஆக குறைந்துவிட்டது. மழைக்கும், வெயிலுக்கும், வறட்சிக்கும், வெள்ளத்திற்கும் தாக்குப்பிடிக்கும் துறவு மனப்பான்மை கொண்ட மரம் அது.

ஒரு நல்ல மரத்தில் 180 லிட்டர் பதனீரும், 25 கிலோ பனைவெல்லமும், 16 கிலோ பனங்கற்கண்டும், 10 கிலோ எரிபொருளும், 10 கிலோ ஓலையும், 20 கிலோ நாரும் கிடைக்கும்.

பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் ஒரு முறை மேலூரில் உள்ள அவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த மரம் பனைமரத்தைப் போன்ற சாயலில் இருந்தது. ‘இது கூந்தப் பனை. இதிலிருந்து ஓலைகளைப் பதப்படுத்தித்தான் நம் சுவடிகளை உருவாக்கினார்கள். இந்த மரம்தான் நம் தமிழ் இலக்கியங்களை காப்பாற்றிய பெருமை கொண்டது. காலையில் எழுந்ததும் இந்த மரத்தை வணங்கிவிட்டுத்தான் மற்ற பணிகளைச் செய்வேன்’ என்று சொல்லி கன்னத்தில் போட்டுக்கொண்டார். நெகிழ்ந்து போனேன். கூந்தல் பனையை ‘தாழிப்பனை’ என்றும், ‘தாளிப்பனை’ என்றும் குறிப்பிடுகிறார்கள்.

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது எல்லா இடங் களிலும் பனை வெல்லம் கிடைக்கும். அப்போது சர்க்கரைக்கு விலையதிகம். எளியவர்கள் பயன்படுத்தும் இனிப்புப் பொருளாக பனைவெல்லம் இருந்தது. நாங்கள் கிராமத்திற்குச் செல்கிறபோது தள்ளு வண்டியில் பதனீரைக் கொண்டுவருவார்கள். எங்கள் ஊரில் அதை ‘தெளிவு’ என்று கூறுவார்கள்.

சின்னக் குவளை நிறைய மொண்டு கொடுக்கும் பதனீருக்கு இரண்டு பைசா வாங்குவார்கள். பத்து இருபது குவளைகள் கூட குடிப்போம். விடியற்காலையில் அது வரும். எங்கள் பாட்டி, ‘தெளிவு குடி, வயிற்றுப் புண் எல்லாம் சரியாகும்’ என்று தொடக்கத்தில் எங்களை வற்புறுத்திக் குடிக்க வைக்கும். பிறகு அந்தச் சுவை எங்களுக்கு பிடிக்க ஆரம்பித்தது. அதுபோலத்தான் பனங்கிழங்கு சாப்பிட்டால் அடுத்த நாள் வயிறு சுத்தமாகிவிடும். அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை அடியோடு நீக்கிவிடும்.

இப்போது சர்க்கரையைவிட பனைவெல்லம் பல மடங்கு விலை. கிடைப்பதும் அரிது. அங்கங்கே நெடுஞ்சாலை ஓரங்களில் கருப்பட்டியை அபூர்வப் பொருள்போல விற்று வருகிறார்கள். திருநெல்வேலியிலிருந்து எனக்காக அக் கறையுடன் அதைக் கொண்டுவரும் நண்பர்கள், பாதையில் விற்பவை பெரும்பாலும் கலப்படமென்றும், அதில் சர்க்கரை கலப்பதாக குறிப்பிடுகிறார்கள்.

திருநெல்வேலி பக்கத்தில் வீட்டிற்கு வந்தால் நீரோடு கருப்பட்டியை சாப்பிடக் கொடுப்பது வழக்கம். இப்போதெல்லாம் இந்த நடைமுறை அருகிவருகிறது. தென்னைமரத்தில் இருக்கும் தேங்காயைப் பறிக்கவே ஆள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. நெடிதுயர்ந்த பனைமரத்தில் ஏறி குலைகளைக் கீழே தள்ளுவது லேசான காரியமல்ல. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உயரே ஏறுபவர்களிடம் ஒரு ரூபாய்க்கும், இரண்டு ரூபாய்க்கும் பேரம் பேசும் அற்பம் நம்மிடம் உண்டு. பனை ஓலைக் குடைகளும், பைகளும் இயற்கையைப் பாதிக்காத சுற்றுச் சூழல் நட்புப் பொருளாக வலம் வந்த தமிழகத்தில் இன்று எங்கு பார்த்தாலும் நெகிழிப் பைகள் நீர்நிலைகளின் கழுத்தை நெரிக்கின்றன.

மறைந்து வருகிற இந்த மாநில மரத்தை காப்பாற்றுவதற்கு பேராசிரியர் நரசிம்மன் இலங்கையை உதாரணம் காட்டுகிறார். அங்கு இதன் அழிவை உணர்ந்து நிறைய மரங்களை நடத் தொடங்கினார்கள்.

தமிழகத்திலும் ஒரு காலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் சாலையோரங்களில் பனங்கொட்டைகளை ஊன்றியதை நான் பார்த்திருக்கிறேன். நரசிம்மன் வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகள் நுங்கிலிருந்து ஐஸ்கிரீம் தயாரிப்பதை உதாரணம் காட்டுகிறார். பனங்காட்டுச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யலாம். இப்போது பனை மரம் ஏறுபவர்கள் ஆயிரத்திற்கு ஒருவரே அகப்படு கிறார்கள். பனையைக் காப்பாற்றுவது அனைவரின் கடமை.

எது மலிவென்று நினைக்கிறோமோ அதையே காலம் மகத்தானதாக மாற்றிவிடும் என்பதே இச்செய்தி தரும் சேதி

(செய்தி தொடரும்)

உச்ச நட்புக்குப் பனையே உதாரணம்

அர்த்தமுள்ள இந்துமதம் என்கிற நூலில் நட்பு குறித்து மரங்களையும் மனிதர்களையும் ஒப்பிடும் பழம்பாடல் பற்றி கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.

பாக்கு மரம் அதிக கவனத்தை ஈர்க்கும். நாள்தோறும் நீர்பாய்ச்சிப் பராமரித்தால்தான் பலன் தரும். அதைப்போலவே சில நண்பர்கள் அன்றாடம் உதவி செய்தால் மட்டுமே நேசக் கரத்தை நீட்டுவார்கள்.

சிலர் தென்னையைப் போல. அன்றாடம் கவனிக்காவிட்டாலும் அடிக்கடி கவனிக்கவேண்டும். தலையாய நட்பு கொண்டவர்கள் பராமரிப்பு செய்யாமலேயே பயன் தரும் பனையைப் போல. உச்ச நட்புக்குப் பனையே உதாரணம்.

அப்பாடல்:

கடையாயார் நட்பிற் கமுகனையார், ஏனை

இடையாயார் தெங்கின் அனையர்; - தலையாயார்

எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,

தொன்மை யுடையார் தொடர்பு 

Next Story