கணவரிடம் மனைவியின் எதிர்பார்ப்பு


கணவரிடம் மனைவியின் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 6 Aug 2017 5:30 PM IST (Updated: 6 Aug 2017 4:00 PM IST)
t-max-icont-min-icon

கணவர் தன்னை அக்கறையாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் அதிகம் இருக்கும்.

ணவர் தன்னை அக்கறையாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் அதிகம் இருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக நடந்து கொண்டால், கணவர் மீது மனைவிக்கு கோபம் வரும். பெண்கள் தங்கள் கணவரிடம் எதிர்பார்க்கும் முக்கிய விஷயங்கள்:

* பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். அவர்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பு கொடுத்து நடக்க வேண்டியது கணவரின் முக்கிய பொறுப்பாகும். மனைவி கோபமாகவோ, சந்தோஷமாகவோ இருக்கும்போது அதற்குரிய உணர்ச்சிகளை தன் தரப்பில் இருந்து கணவர் வெளிப்படுத்த வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பார்.

* மனைவி சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கும்போது காது கொடுத்து கேட்க வேண்டும். கணவர் எந்த அளவிற்கு ரசித்து கேட்கிறார் என்பதை அவரின் கண்களை வைத்தே தீர்மானித்துவிடுவார்கள். பேசிக்கொண்டிருக்கும்போது கண்களை வேறு எங்காவது அலைபாயவிட்டுக்கொண்டிருந்தால் கடுமையாக கோபப்படுவார்கள். கணவர் தன்னுடைய பேச்சை ஆழ்ந்து கவனிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

* வெளி இடங்களுக்கு புறப்பட்டு செல்லும்போது பெண்கள் உடை, ஒப்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக செலவிடும் நேரத்தை பற்றி கணவர் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த நேரத்தில் கணவர் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். ‘சீக்கிரம் கிளம்பு, நேரமாயிடுச்சி’ என்று அவசரப்படுத்திக்கொண்டே இருக்கும் கணவரின் சுபாவத்தை ரசிக்கமாட்டார்கள்.

* தன்னுடன் வெளியே புறப்படும் கணவர் உடுத்தும் உடை, சிகை அலங்காரம் போன்றவற்றிலும் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பொருத்தமற்ற ஆடைகளை தேர்ந்தெடுப்பதை விரும்பமாட்டார்கள். ஒருவேளை கணவரின் உடை பிடிக்காமல் போய்விட்டால் வேறு உடையை உடுத்துமாறு கட்டாயப்படுத்துவார்கள். அதனை அலட்சியம் செய்யும் கணவர் மீது அதிருப்தி கொள்வார்கள். கணவரின் சிகை அலங்காரமும் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

* எப்போதும் செல்போனிலேயே மூழ்கியிருக்கும் கணவர் மீது மனைவிக்கு அதிருப்தி மேலிடும். வீட்டுக்கு வந்த பிறகு செல்போனில் தொடர்பில் இருந்துகொண்டே தன்னுடைய முகத்தை பார்க்காமல் பேசிக்கொண்டிருக்கும் கணவர் மீது கடும் அதிருப்தி கொள்வார்கள்.

* தன்னை விட மற்றவர்களுக்கோ, மற்ற பொருட்களுக்கோ அதிக முக்கியத்துவம் கொடுப்பதை ஒரு போதும் விரும்பமாட்டார்கள். கணவன்-மனைவி இருவரும் தனித்தனி இருசக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களாக இருந்தால் இரண்டு வாகனங்களின் பராமரிப்புக்கும் கணவர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கணவர் தன்னுடைய வாகனத்திற்கு மட்டும் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வதை மனைவியால் ஏற்றுக்கொள்ள இயலாது.

* கணவர் தன் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவராக, மற்றவர்கள் மத்தியில் தன்னை விட்டுக்கொடுக்காதவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்ப்பார்கள். தன்னிடம் நன்றாக பேசிவிட்டு, நெருக்கமான உறவுகளிடம் எதிர்மறையான கருத்துக்களை கூறுவதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

* தங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு கணவரிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காதபட்சத்தில் வருத்தம் அடைவார்கள். அதுவே தொடர்கதையாக தொடரும் பட்சத்தில் கணவர் மீது கடும் அதிருப்தி கொள்வார்கள். தங்கள் ஆசைகளில் ஒருசிலவற்றையாவது கணவர் நிறைவேற்றித்தர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

* சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கணவர் கோபப்படுவதையோ, குற்றம், குறை கூறிக்கொண்டே இருப்பதையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தாங்கள் செய்யாத தவறை கணவர் நம்பாவிட்டால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆகாகிவிடுவார்கள்.

* மூன்றாம் நபர்களின் பேச்சை கேட்டு கணவர் தன்னை வழி நடத்த முற்படுவதை விரும்பமாட்டார்கள். அதிலும் மற்றவர் களின் பேச்சை கேட்டு கணவர் தன்மீது நம்பிக்கை இழக்கும்போது மிகுந்த மன வேதனையடைவார்கள். 

Next Story