நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பா.ஜனதா மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பா.ஜனதா மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Aug 2017 4:30 AM IST (Updated: 6 Aug 2017 10:28 PM IST)
t-max-icont-min-icon

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பா.ஜனதா மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

களியக்காவிளை,

குமரி மாவட்ட பா.ஜனதா செயற்குழு கூட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த பயணம் ஸ்ரீ செண்பகவல்லி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிள்ளியூர் மண்டல பார்வையாளர் சுடர்சிங் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் முருகன், கோட்ட இணை அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாநில வணிகர் பிரிவு தலைவர் ராஜகண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. அவை பின்வருமாறு:–

ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஏழைகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே முறையாக விசாரணை நடத்தி தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். தவறு செய்யும் டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் பழுதடைந்த அரசு பஸ்களை இயக்குவதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை கண்டித்து வரும் 21–ந் தேதி நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு பொதுமக்களை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருவதால் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றி சீரமைக்க வேண்டும். மேலும் அறநிலையத்துறைக்கு சொந்தமான குளங்களை தூர்வார வேண்டும்.

பேச்சிப்பாறை அணையில் திறந்து விடப்படும் தண்ணீரை தெங்கம்புதூர் அந்திக்கடை பகுதி வரை கொண்டு சென்று அனைத்து குளம் மற்றும் கிணறுகளில் நிலத்தடி நீர் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட பொதுசெயலாளர்கள் சஜீ, தங்கப்பன், மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story