டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 ஏ தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 14,014 பேர் எழுதினர்


டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 ஏ தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 14,014 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 7 Aug 2017 4:30 AM IST (Updated: 7 Aug 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்–2 ஏ தேர்வை 14 ஆயிரத்து 14 பேர் எழுதினர்.

தூத்துக்குடி,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) மூலம் பல்வேறு துறை உதவியாளர்கள் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2ஏ தேர்வு நேற்று நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் உள்ள 67 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

இதில் தூத்துக்குடியில் 33 மையங்களில் 9 ஆயிரத்து 162 பேரும், கோவில்பட்டியில் 20 மையங்களில் 5 ஆயிரத்து 667 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 4 மையங்களில் 955 பேரும், திருச்செந்தூரில் 10 மையங்களில் 2 ஆயிரத்து 865 பேரும் ஆக மொத்தம் 18 ஆயிரத்து 649 பேர் தேர்வு எழுதுவதற்கு ஆன்லைன் மூலம் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.

இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. இதில் மொத்தம் 14 ஆயிரத்து 14 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 4 ஆயிரத்து 635 பேர் தேர்வு எழுதவில்லை. மில்லர்புரம் விகாஷா  மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த தேர்வை கண்காணிக்க உதவி கலெக்டர்கள் தீபக் ஜேக்கப், அனிதா, கணேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, மாவட்ட கல்வி அலுவலர்கள் சின்னராசு, செந்தூர்கனி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முனியசாமி ஆகியோர் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது.

கோவில்பட்டியில் நேசனல் என்ஜினீயரிங் கல்லூரி, கே.ஆர். கலை கல்லூரி, லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி. மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 20 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. கோவில்பட்டியில் இந்த தேர்வை எழுத, 5 ஆயிரத்து 667 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 4 ஆயிரத்து 348 பேர் தேர்வு எழுதினார்கள். 1,319 பேர் வரவில்லை.

இந்த தேர்வு மையங்களை கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் ஆகியோர் பார்வையிட்டனர். தேர்வு மையங்களில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த தேர்வையொட்டி விண்ணப்பதாரர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக போக்குவரத்து வசதி செய்யப்பட்டு இருந்தது. குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.


Related Tags :
Next Story