வீரசைவ, லிங்காயத் சமூகங்களை தூண்டிவிடுகிறார் சாதிகள் இடையே மோதலை உருவாக்க சித்தராமையா முயற்சி


வீரசைவ, லிங்காயத் சமூகங்களை தூண்டிவிடுகிறார் சாதிகள் இடையே மோதலை உருவாக்க சித்தராமையா முயற்சி
x
தினத்தந்தி 7 Aug 2017 2:00 AM IST (Updated: 7 Aug 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

வீரசைவ, லிங்காயத் சமூகங்களை தூண்டிவிட்டு சாதிகள் இடையே மோதலை உருவாக்க சித்தராமையா முயற்சி செய்வதாக எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பெங்களூரு,

வீரசைவ, லிங்காயத் சமூகங்களை தூண்டிவிட்டு சாதிகள் இடையே மோதலை உருவாக்க சித்தராமையா முயற்சி செய்வதாக எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

மாநில செயற்குழு கூட்டம்

கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:–

ஆதிதிராவிடர்கள், பழங்குடியின மக்கள் தங்களின் பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது பொய். சமீபத்தில் ‘விஸ்தாரக்‘ என்ற பெயரில் நமது கட்சி தொண்டர்கள் வீடு, வீடாக சென்று நமது கொள்கை, மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறினார்கள். அப்போது, ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் காங்கிரஸ் பக்கம் இல்லை என்ற உண்மை தெரியவந்தது.

காங்கிரஸ் பலவீனமாகியுள்ளது

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நமது கட்சி மேலிட தலைவர்கள் நமக்கு கட்டளையிட்டு உள்ளனர். அதன் மூலம் முன்மாதிரி மாநிலமாக கர்நாடகத்தை மாற்ற உழைக்க வேண்டும் என்றும் அவர்கள் நமக்கு அறிவுரை கூறி இருக்கிறார்கள். நாம் அதை நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் நமது பக்கம் இருக்கிறார்கள். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3 மடங்கு அதிகரித்து உள்ளது. மோடியின் தலைமைக்கு இணையான தலைவர் யாரும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ராகுல் காந்தியை கட்சி தலைவராக ஆக்க காங்கிரஸ் கட்சி தயங்குகிறது. மோடியின் பலமான தலைமையால் காங்கிரஸ் பலவீனமாகியுள்ளது.

கொள்ளையடித்து வருகிறது

கர்நாடகத்தில் சித்தராமையா அரசு அனைத்து துறைகளிலும் கொள்ளையடித்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச டாக்டர் அம்பேத்கர் மாநாடு மூலம் ரூ.30 கோடி ஊழல் நடந்துள்ளது. அம்பேத்கர், பாபுஜெகஜீவன்ராம் ஆகியோருக்கு அவமானம் இழைத்த காங்கிரஸ் கட்சி, அவர்களின் பெயர்களில் நடத்திய மாநாட்டில் ஊழல் செய்து மேலும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாநில காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிராக நமது கட்சியினர் போராட வேண்டும். ஒவ்வொரு ஊழலையும் ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்த வேண்டும். சித்தராமையா அரசு அனைத்து துறையிலும் தோல்வி அடைந்துவிட்டது. இதை மூடி மறைக்க சாதிகள் இடையே மோதலை உருவாக்க சித்தராமையா முயற்சி செய்கிறார். தேவை இல்லாமல் வீரசைவ, லிங்காயத் சமூகங்களை அவர் தூண்டி விடுகிறார். பிரச்சினையே இல்லாமல் இருந்த கர்நாடக கொடி வி‌ஷயத்திலும் சர்ச்சைக்கு இடம் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

1,120 விவசாயிகள் தற்கொலை

கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு 3,102 கற்பழிப்புகள், 19 ஆயிரத்து 309 பெண் குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், 420 கடத்தல்கள், 19 இந்துமத அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி இடமாற்றத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளன.

2016–17–ம் ஆண்டில் 1,120 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு காங்கிரஸ் அரசின் பொறுப்பற்றத்தனமான செயல்பாடுகளே காரணம். ஒருபுறம் ஆளும் காங்கிரஸ் சரியாக செயல்படாவிட்டாலும், மத்திய பா.ஜனதா அரசு கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளது. கர்நாடகத்தில் தற்போது 7 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதை வருகிற 2019–ம் ஆண்டுக்குள் 14 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்க உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி உறுதி அளித்துள்ளார்.

150 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி

தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம். இதில் 150 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நமது கட்சி செய்துள்ளது. மத்திய அரசு 2 கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளது. இந்த இரண்டிலும் மக்களின் எண்ணம் பா.ஜனதாவுக்கு சாதகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

எந்த கட்சியில் இருந்து நிர்வாகிகள் வந்தாலும் அவர்களை நமது கட்சியில் சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் அளிக்க மாட்டோம். மாற்று கட்சிகளில் இருந்து வரும் தலைவர்கள் முதலில் தங்களை கட்சியின் வளர்ச்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும். யாருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்பதை நமது கட்சி மேலிடம் முடிவு செய்யும். வெளியில் இருந்து வரும் தலைவர்களால் நமது கட்சிக்காக பாடுபட்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது. இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, ரமேஷ் ஜிகஜினகி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், துணைத்தலைவர் ஆர்.அசோக், ஷோபா எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story