மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்ட விவகாரத்தில் தமிழக அரசு தனது திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும்


மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்ட விவகாரத்தில் தமிழக அரசு தனது திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 Aug 2017 6:00 AM IST (Updated: 7 Aug 2017 12:43 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்ட விவகாரத்தில் தமிழக அரசு தனது திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சியின் 52–வது வார்டுக்கு உட்பட்ட ஜனசக்தி நகரில் அரசு சார்பில் 153 குடும்பத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு அங்கு குடியிருந்து வருகிறார்கள். இந்தநிலையில் தனியார் ஒருவர் கோர்ட்டு மூலமாக உத்தரவு பெற்று அந்த இடத்தை விட்டு காலி செய்யுமாறு அங்கு குடியிருப்பவர்களுக்கு மிரட்டல் விடுத்து வருவதாக தெரிகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் நேற்று காலை ஜனசக்தி நகர் பகுதிக்கு சென்று அங்கிருந்த மக்களை சந்தித்து அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கடந்த 1967–ம் ஆண்டு திருப்பூரில் புறநகர் பகுதியான ஊராட்சி பகுதியில் ஜனசக்திநகர் இருந்தது. தற்போது மாநகராட்சி பகுதிக்குள் வந்துள்ளது. கோர்ட்டு உத்தரவுப்படி இந்த பகுதி மக்களுக்கு அரசு மூலம் பட்டா வழங்கப்பட்டது. இதில் ஒருவர், அரசு சார்பில் தவறாக பட்டா வழங்கப்பட்டுள்ளது என்று கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணைக்கு அரசு தரப்பிலும், இங்கு குடியிருப்பவர்கள் தரப்பிலும் யாரும் ஆஜராகவில்லை. இதனால் மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்து விட்டார்கள். இதனால் இங்கு குடியிருப்பவர்களை காலி செய்யுமாறு மிரட்டி வருவதாக தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் கோர்ட்டு மூலமாகவும், வருவாய்த்துறை அமைச்சர் மூலமாகவும் அணுகப்படும். ஆதிதிராவிடர்கள் மற்றும் நலிந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா இதுவாகும். அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி முயற்சி எடுத்துள்ளது. வருகிற வெள்ளிக்கிழமைக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்களிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒரு குழுவாக நேரடியாக சென்று வலியுறுத்தப்படும். இங்கு குடியிருக்கும் மக்கள் யாரையும் காலி செய்ய விடாமல் தடுத்து காத்து நிறுத்தி இதே இடத்தில் தொடர்ந்து குடியிருக்கும் நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மேற்கொள்ளும்.

உணவுப்பொருட்கள், சிறு, குறு தொழில்கள் மீது ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒரே பொருள் எத்தனை கை மாறுகிறதோ அத்தனை வரி போடப்படுகிறது. இந்த வரியால் விலை குறையும் என்றனர். ஆனால் விலை அதிகரித்துள்ளது. சொகுசு கார் விலை குறைந்துள்ளது. ஆனால் சப்பாத்தி முதல் கடலை மிட்டாய் வரை விலை ஏற்றம் பெற்றுள்ளது. அதனால் மத்திய அரசு சொன்னது வேறு, செய்திருப்பது வேறு.

தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்துகிறது. துப்புரவு செய்வது நல்ல திட்டம் தான். பிளாஸ்டிக் பைகளை சேகரித்து அவற்றை அரைத்து சாலைபோடுவதற்கு பயன்படுத்தும் 6 தொழிற்சாலைகள் தமிழகத்தில் உள்ளன. மத்திய அரசு மாநகராட்சி, நகராட்சி போன்றவற்றில் முழுக்க முழுக்க சாலைகளில் இந்த பிளாஸ்டிக்கை கலக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த சாலைகள் மழை பெய்தாலும் விரைவில் பழுதடையாமல் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அந்த தொழிற்சாலைகள் மீது 15 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் தொழிலை நடத்த முடியவில்லை. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள 3 லட்சம் பேர் உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வருகிற 9–ந் தேதி சென்னையில் கூடுகிறார்கள்.

மத்திய அரசு குறைந்தபட்ச அரிசியை விலை கிலோ ரூ.3, கோதுமை ரூ.2 என அனைத்து குடும்பத்துக்கும் வழங்கலாம். அதிகபட்சமாக ஒருவருக்கு 20 கிலோ வழங்கலாம் என்று உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தது. தமிழகத்தில் ரே‌ஷன் கடையில் இலவசமாக அரிசி வழங்குகிறோம். எனவே இந்த சட்டம் எங்களுக்கு பொருந்தாது என்று தமிழகத்தின் முதல்–அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அறிவித்தார். அவர் இறந்த பிறகு, மத்திய அரசின் சட்டத்தை நிறைவேற்றுகிறோம் என்று தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. ஆனால் இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசி, முதியோர்களுக்கு வழங்கப்படும் 30 கிலோ அரிசி மற்றும் அம்மா உணவகங்களில் வழங்கப்படும் ரூ.5–க்கு சாம்பார் சாதம் ஆகியவற்றை தடை செய்யக்கூடாது என்று தமிழக அரசு விதிவிலக்கு கேட்டது. அம்மா உணவகம் தொடரும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

ஒரு வருடத்துக்குள் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மானியம் கொடுக்கப்படாது. நெல்லும், கோதுமையும் தரப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் மத்திய அரசு விதிவிலக்கு தருவதாக நம்புகிறோம் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இதை நாங்கள் நம்பவில்லை. இதை தமிழக அரசு துணிந்து எதிர்க்க வேண்டும். தனது திட்டத்தில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.


Next Story