திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதி கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதி கிளை சார்பில் வெள்ளியங்காடு நால் ரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். கிழக்கு நகர செயலாளர் ராஜகோபால், மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரம், சாலையோர சங்க செயலாளர் பாலன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் 50–வது வார்ட்டுக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரை உடனடியாக அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என்றும், கொசு உற்பத்தியை தடுக்க கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.