தமிழகம் முழுவதும் ரூ.300 கோடியில் கண்மாய்கள், ஏரிகள் தூர்வாரப்படும்


தமிழகம் முழுவதும் ரூ.300 கோடியில் கண்மாய்கள், ஏரிகள் தூர்வாரப்படும்
x
தினத்தந்தி 7 Aug 2017 4:15 AM IST (Updated: 7 Aug 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் ரூ.300 கோடியில் கண்மாய்கள், ஏரிகள் தூர்வாரப்பட உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை மேற்கு வட்டத்தில் 110 பயனாளிகளுக்கு ரூ.7.24 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் வீரராகவராவ் கலந்து கொண்டார். இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:–

தமிழக அரசு பல்வேறு துறையின் மூலம் நலத்திட்டங்களை செய்து வருகிறது.

அதன்படி மதுரை மாவட்டம் மதுரை மேற்கு வட்டம் துவரிமானில் ரூ.28 ஆயிரம் மதிப்பில் சமூகபாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கும், ரூ.6.96 லட்சம் மதிப்பில் 19 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவும், 50 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், 13 விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்கும் ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இடஒதுக்கீடு செய்து பல்வேறு நலத் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் இதுவரை குடிமராமத்து பணிக்கென ஒதுக்கிய நிதி ரூ.100 கோடியாகும். இதில் 1519 கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ரூ.585.90 லட்சம் மதிப்பில் 72 கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. 2017–18 நிதியாண்டில் ரூ.300 கோடி குடிமராமத்து பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரத்து 67 கண்மாய்கள் மற்றும் ஏரிகள் தமிழகம் முழுவதும் தூர்வாரப்பட உள்ளன. மேலும் ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து தடுப்பணை கட்டும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம் என்று முதல்–அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:– மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை மாதந்தோறும் 1 லட்சத்து 27 ஆயிரத்து 127 பயனாளிகளுக்கு ரூ.1,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரம் மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு 4 லட்சத்து 33 ஆயிரம் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் குடிமராமத்து பணிக்கு 1,194 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு 317 கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் 74 ஆயிரத்து 160 கன மீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது. ரூ.25 கோடி செலவில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது சுகாதாரத்துறை மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதில் மேற்கு வட்டாட்சியர் சிவபாலன், திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோனாபாய், கார்த்தியாயிணி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story