அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் கல்வி நிதி, ஓய்வூதியம் உடனே வழங்க வேண்டும்


அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் கல்வி நிதி, ஓய்வூதியம் உடனே வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 7 Aug 2017 4:15 AM IST (Updated: 7 Aug 2017 1:32 AM IST)
t-max-icont-min-icon

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் கல்வி நிதி, ஓய்வூதியம் உடனே வழங்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கட்டிட தொழிலாளர் மத்திய சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி, கட்டிட தொழிலாளர் மத்திய சங்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம், பொன்குமார் இளைஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு விவசாய தொழிலாளர் கட்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார்.

மாவட்ட ஆலோசகர் காளிமுத்து, மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜா, விவசாய தொழிலாளர் கட்சி மாவட்ட செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி வரவேற்றார்.

கல்வி நிதி

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் 2016-ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்புக்கான கல்வி நிதிகள் வழங்கப்படவில்லை. அதே போல் ஓய்வூதிய மனு கொடுத்தும் 3 ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்கவில்லை. இதனால் அரசு அதற்கான நிதியை ஒதுக்கி உடனே வழங்க வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு தாமதம் இன்றி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

விலக்கு வேண்டும்

தஞ்சை மாவட்டத்தில் அரசு மணல் குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக விலைக்கு மணல் விற்கப்படுகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் வாயு போன்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும். தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் மற்றும் விவசாயிகள் 10 பேரை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

கூட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர் மத்திய சங்க மாவட்ட செயலாளர் ஜெசிந்தாவசந்தராணி, கட்டிட தொழிலாளர் மத்திய சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தன், துணைத்தலைவர்கள் ஆரோக்கியராஜ், முருகையன், இளைஞரணி துணைத்தலைவர் சுரேஷ், மாவட்ட தலைவர் குமார், விவசாய தொழிலாளர் கட்சி மாவட்ட துணைத்தலைவர் விக்டர், மகளிரணி தலைவி பிச்சையம்மாள், இளைஞரணி செயலாளர் ஆல்பர்ட்ராஜ், பொருளாளர் வியாகுலமேரி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story