காரில் கடத்தி தச்சுத்தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை சாலையோரத்தில் பிணம் வீச்சு


காரில் கடத்தி தச்சுத்தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை சாலையோரத்தில் பிணம் வீச்சு
x
தினத்தந்தி 7 Aug 2017 4:45 AM IST (Updated: 7 Aug 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் காரில் கடத்தி சென்று தச்சுத்தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். சாலையோரத்தில் அவரது பிணத்தை வீசி சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னங்குறிச்சி,

சேலம் கன்னங்குறிச்சி பச்சாகோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 35), தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி சுதா. இவர்களுக்கு ஸ்ரீதர் என்ற மகனும், நித்தியஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். பாபு நேற்று மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒருவருடைய வீட்டில் தச்சு வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது அவருடைய செல்போனில் பேசிய நபர், பாபுவை உடனடியாக உனது வீட்டுக்கு வா என்று அழைத்து உள்ளார். அதன்பேரில் அவரும் தனது வீட்டின் அருகே வந்தார். அப்போது ஏற்கனவே அங்கு காரில் காத்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென பாபுவை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து அமர வைத்தது.

இந்த நேரத்தில் அங்கிருந்த பாபுவின் குழந்தைகளிடம், “உன் அப்பாவை கடைசியாக பார்த்துக் கொள்ளுங்கள், இனி அவர் வரமாட்டார்“ என்று அவர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த கும்பல் அவரை காரில் ஏற்காடு அடிவாரம் குரும்பப்பட்டி அருகே உள்ள வனப்பகுதிக்கு கடத்தி சென்றது.

பின்னர் கும்பல் அங்கு வைத்து பாபுவை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தது. இதையடுத்து பிணத்தை சாலையோரத்தில் வீசிவிட்டு அவர்கள் தப்பிச்சென்று விட்டனர். பாபு கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னங்குறிச்சி மற்றும் ஏற்காடு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர் செந்தில்குமார் வந்து தடயங்களை சேகரித்தார்.

இதையடுத்து பாபுவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாபுவை கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த 6 பேர் கடத்தி சென்றது தெரியவந்தது. எனவே, அவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

முன்விரோதம் காரணமாக அந்த கும்பல் அவரை கடத்தி சென்று கொலை செய்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Tags :
Next Story