செயற்கை மணல் மரப்பில் ஆபத்தை உணராமல் தூண்டில் முள்வளைவு பகுதிக்கு செல்லும் மக்கள்
புதுச்சேரி கடற்கரைக்கு வரும் மக்கள், செயற்கை மணல்பரப்பு பகதிக்கு சென்று கடலில் இறங்கி உற்சாகமாக குளியல் போடுகிறார்கள், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி கடற்கரைக்கு வரும் மக்கள், செயற்கை மணல்பரப்பு பகதிக்கு சென்று கடலில் இறங்கி உற்சாகமாக குளியல் போடுகிறார்கள். அப்போது அவர்கள் ஆபத்து எச்சரிக்கையையும் மீறி துண்டில் முள்வளைவு பகுதிக்கு செல்கிறார்கள். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதுவை கடலில் காந்தி சிலையின் பின்புறம் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக புதுவை தலைமை செயலகம் அருகே கடலுக்குள் பாறாங்கற்களை கொட்டி தூண்டில் முள்வளைவு அமைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து புதுவை துறைமுக முகத்துவாரத்தில் மணல்வாரி கப்பல் மூலம் தூர்வாரப்பட்ட மணல் ராட்சத குழாய்கள் மூலமாகவும், நேரடியாக கப்பலில் இருந்து பீய்ச்சி அடித்தும் செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறு தூர்வாரப்பட்ட மணல் கடல் அலைகள் மூலம் அடித்துவரப்பட்டு தற்போது தலைமை செயலகம் அருகே படிந்துள்ளது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் கடற்கரைக்கு உள்ளூர்வாசிகள் உள்பட சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்கள் மணல் பரப்பில் இறங்கி உற்சாக குளியல் போட்டனர்.
தூண்டில் முள் வளைவு அமைக்கப்பட்ட இடத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று மாலையில் தடுப்பு கட்டைகளை தாண்டியும், அறிவிப்பு பலகையை பொருட்படுத்தாமல் தூண்டில் முள்வளைவுக்கு ஆபத்தை உணராமல் ஏராளமானோர் சென்றனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.