திருவள்ளூர் மாவட்டத்தில் கொசு ஒழிப்பு பணியில் 1,100 தற்காலிக பணியாளர்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசு ஒழிப்பு பணியில் 1,100 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர்(பொறுப்பு) முத்து தெரிவித்துள்ளார்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை கிராமத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த கிராமத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில் செங்கரை கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) முத்து கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 45 நபர்கள் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால் 42 பேர் வீடு திரும்பி உள்ளனர். 3 பேர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்ப உள்ளனர். மேலும் சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு பணியில் 1,100 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 நபர்கள் கொண்ட 42 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் காலை, மாலை நேரங்களில் 84 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா, சுகாதார ஆய்வாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் நகராட்சி தனி அதிகாரி சர்தார் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–
காஞ்சீபுரம் நகராட்சி பகுதிகளில் கொசுக்களால் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கொசு ஒழிப்பு பணிக்காக 100 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு, வீடாக சென்று சுற்றுப்புற பகுதிகளில் பயன்படுத்தாத பொருட்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை கண்டுபிடித்து அகற்றுவார்கள். மேலும் கொசுவை கட்டுப்படுத்தும் பணியிலும் வார்டு, வார்டாக சென்று பணியாற்றுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.