பனைக்குளம் ஊராட்சியில் துப்புரவு பணிகள்; திட்ட இயக்குனர் ஆய்வு


பனைக்குளம் ஊராட்சியில் துப்புரவு பணிகள்; திட்ட இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Aug 2017 10:30 PM GMT (Updated: 7 Aug 2017 6:30 PM GMT)

மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற துப்புரவு பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு, மலேரியா மற்றும் மர்ம காய்ச்சல்களை தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பள்ளிக்கூடங்கள், பஸ் நிறுத்தம், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சியில் பகுருதீன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் ஊராட்சி செயலர் ரோகிணி மேற்பார்வையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்த பணிகளை மாவட்ட திட்ட இயக்குனர் தனபதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

அதனை தொடர்ந்து தெருக்கள் மற்றும் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அதிகாரிகள் சாலைகளில் கழிவுநீர் தேங்காமல் கால்வாய்களை சீரமைக்கவும், குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அகற்றவும், குறிப்பாக பள்ளிக்கூடங்கள் அருகில் குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்ளவும் ஊராட்சி செயலருக்கு அறிவுரை வழங்கினர். அவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, ராஜேந்திரன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அன்னபூர்ணா தேவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி ஆகியோர் உடன் சென்றனர்.


Next Story