கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இளந்தமிழன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்தை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ‘தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி ஊராட்சி நல்லகருப்பன்கட்டி கிராமத்தில் 1941–ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் 1 ஏக்கர் 12 செண்ட் பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு உள்ளது. பஞ்சமி நிலத்தை மீட்டு அதற்கு உரியவர்களிடம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.