வால்பாறையை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க முடிவு


வால்பாறையை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க முடிவு
x
தினத்தந்தி 7 Aug 2017 11:00 PM GMT (Updated: 7 Aug 2017 7:02 PM GMT)

வால்பாறை பகுதியை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டு பேச்சுவார்தையில் சமரசம் ஏற்பட்டது.

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை எஸ்டேட் அதிகமாக உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தினமும் கூலியாக ரூ.234 வழங்கப்பட்டது. கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த மாதம் 1–ந் தேதி முதல் தினமும் ரூ.294 கூலியாக வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோன்று தினமும் அவர்கள் செய்யும் வேலையைவிட அதிகளவில் தேயிலை பறிக்கும்போது ஊக்கத்தொகையாக தினமும் ரூ.4 வழங்கப்பட்டு வந்தது. அதையும் உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக தேயிலை தோட்ட அதிபர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் தேயிலை தோட்ட அதிபர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் பேச்சுவார்த்தை கோவையில் நேற்று நடந்தது. தோட்ட அதிபர்கள் சங்கம் சார்பில் ராம்குமார், பிரதீப்குமார், பாலசந்தர், மகேஷ் நாயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொழிற்சங்கங்கள் சார்பில், அண்ணா தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் வால்பாறை வி.அமீது, செயலாளர் ஜார்ஜ், எல்.பி.எப். தொழிற்சங்க தலைவர் பி.சவுந்திரபாண்டியன், செயலாளர் சுந்தர்ராஜன், துணைத்தலைவர் செல்லமுத்து, ஐ.என்.டி.யு.சி. கருப்பையா, பாஸ்கரன், புதிய தமிழகம் இன்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த பேச்சுவார்த்தையில், தொழிலாளர்கள் தினமும் பறித்து வரும் அளவை விட கூடுதலாக பறிக்கும் தேயிலைக்கு ரூ.8.48 ஊக்கத்தொகையாக வழங்குவது என்று முடிவு செய்யப் பட்டது.

பின்னர் இதற்கான ஒப்பந்தத்தில் தேயிலை தோட்ட அதிபர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். இதில் 22 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story