‘பணக்காரர்களை காப்பாற்றவே ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டுள்ளது’ தா.பாண்டியன் குற்றச்சாட்டு


‘பணக்காரர்களை காப்பாற்றவே ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டுள்ளது’ தா.பாண்டியன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Aug 2017 1:00 AM GMT (Updated: 7 Aug 2017 7:19 PM GMT)

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன், ‘பணக்காரர்களை காப்பாற்றவே ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டுள்ளதாக‘ குற்றம் சாட்டினார்.

திருப்பூர்,

பனியன் தொழிலை பாதுகாக்க முறையற்ற ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய போராடும் நோக்கில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ராயபுரத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு 4–வது மண்டல குழு செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சுப்பராயன் முன்னிலை வகித்தார். தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவில் தொழில் வளம் அதிகரித்துள்ளது. படித்த இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் வேலையின்மை என்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டிருப்பது மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜி.எஸ்.டி.யின் நோக்கமே மக்களை வறுமையில் இருந்து மீட்க அல்ல. ராணுவத்தை பலப்படுத்த மட்டுமே. கடந்த ஆட்சியில் குறைந்த பட்ச வரியிலேயே ஜி.எஸ்.டி. நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதிகபட்ச வரியே இதில் விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள வறுமையை ஒழிக்கும் நோக்கில் ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்டதே ரே‌ஷன் உணவு பொருட்கள் வழங்கும் திட்டம். பல்வேறு அரசியல் தலைவர்களின் முயற்சிக்கு ஏற்பவே ரே‌ஷன் பொருட்கள் வழங்குதல், மாணவ, மாணவிகளுக்கான மதிய உணவு திட்டம் மேம்படுத்தப்பட்டது. ஆனால் மத்திய அரசின் நடவடிக்கையால் தற்போது இது கேள்விக்குறியாகி உள்ளது.

கறுப்பு பணத்தை மீட்டு ஏழை மக்களுக்கு கொடுப்பேன் என்று பிரதமர் மோடி அறிவித்தார். மக்களுக்கு தேவையில்லாத திட்டங்களை முன்னெடுக்கும் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. ஆனால் குடிசை தொழிலின் மீது 18 சதவீதம் வரி விதித்துள்ளது. ஓட்டலில் சாப்பிடுபவர்களுக்கு வரி, ஊனமுற்றவர்களுக்கான உபகரணங்களுக்கு வரி, கடலை மிட்டாய்க்கு என அனைத்திற்கும் அதிக பட்ச வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி என்பது விவசாயத்தில் ஏற்படும் வளர்ச்சியே உண்மையானது. தனிநபருக்கான நிறுவனங்களின் வளர்ச்சி அல்ல. பெரும்பணக்காரர்களை காப்பாற்றவே இந்த வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருமுனை வரி அல்ல. பல முனை வரியாக உள்ளது. இதன் மூலம் பொருளாதார தேக்கம் வந்துள்ளது. பாமர மக்களிடம் இருந்து வரியை வசூலித்து பணக்காரர்களை மத்திய அரசு காப்பாற்றுகிறது. நாடு முழுவதும் நிதி, நிலம், அரசியல் மோசடி நடக்கிறது. இந்தியாவை அடிமைப்படுத்தி விட நினைக்கிறார்கள். நாம் அதற்கு துணை போகக்கூடாது. இதனால் இந்த வரிவிதிப்பிற்கு எதிராக போராடினால் மட்டுமே தீர்வு காண முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ரவி, மாநிலக்குழு உறுப்பினர் காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி, பொருளாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story