மக்கள் ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி


மக்கள் ஆதரவு அதிகரித்துக் கொண்டே வருகிறது முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
x
தினத்தந்தி 8 Aug 2017 5:30 AM IST (Updated: 8 Aug 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

எங்கள் அணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துக்கொண்டே வருகிறது என்று முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.

பூந்தமல்லி,

அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா திருவேற்காடு பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கே.பாண்டியராஜன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :–

கடலோர பகுதி மற்றும் கேரளாவின் ஒட்டிய பகுதிகளில் மிகப்பெரிய அளவில் டெங்கு காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே டெங்கு அதிக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் ஒன்று கேரளா அடுத்து தமிழ்நாடு.

சுகாதாரமான முறையில் கால்வாய்கள், நீர்நிலைகளை பராமரிக்கும் மிக அவசரமான காலக்கட்டத்தில் இருக்கிறோம், ஓ.பன்னீர்செல்வம் கூட அரசு மருத்துவத்துறை விழித்தெழிந்து இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று கூறி உள்ளார். அதற்காக போராட்டமும் அறிவித்துள்ளார்.

கூவத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணியை விரைவில் சீர்படுத்த வேண்டும். கூவம் சீர்கெட்ட நதியாக மாறுவது ஆவடி தொகுதியில்தான்.

பருத்திப்பட்டு ஏரி வரை தெள்ளத் தெளிவாக வரும் கூவம் நதி பருத்திப்பட்டில் இருந்து மாசுபட்ட நீராக சென்று கொண்டிருக்கிறது. இதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த ரூ.32 கோடியில் பருத்திப்பட்டு ஏரி சார்ந்த திட்டம் ஏதோ பல காரணங்களால் தொடங்கப்படாமல் உள்ளது. அது விரைந்து தொடங்கப்பட வேண்டும்.

எங்களை பொறுத்த வரையில் நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை நிரூபித்து வருகிறோம். இதுவரை 13 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தி உள்ளோம். ஒவ்வொரு நாளும் செல்ல, செல்ல எங்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அணிகள் இணைவதற்கு வைத்த நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி அணி வெகு விரைவில் ஏற்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நாடகத்தனம் இல்லாத வெளிப்படையாக அறிவிப்பு கொடுத்தால் அணிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாக நான் நம்புகிறேன்.

இப்போது ஊழல் மயமான ஆட்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் மக்கள் மனதில் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட ஆட்சி என்ற எண்ணம் மறைந்து ஊழல் ஆட்சி என்ற எண்ணம் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் வெகு விரைவில் குறைகளை களைந்து அரசாங்கம் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story