டி.டி.வி. தினகரன் வழங்கிய கட்சிப் பொறுப்புகளை ஏற்க உள்ளோம் திருப்பரங்குன்றம், பரமக்குடி எம்.எல்.ஏ.க்கள் பேட்டி
டி.டி.வி.தினகரன் வழங்கிய கட்சிப் பொறுப்புகளை ஏற்க உள்ளோம் என்று, திருப்பரங்குன்றம், பரமக்குடி எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர்.
மதுரை,
அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மதுரை திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போசை மாநில விவசாய அணி பிரிவு இணைச்செயலாளராக அறிவித்தார். அந்த பதவியை உடல்நிலை காரணம் காட்டி சில தினங்களுக்கு முன்பு ஏற்க ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. மறுத்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் திடீரென்று தினகரன் கொடுத்த பதவியை ஏற்க உள்ளேன் என்று தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:–
அ.தி.மு.க.வில் பதவி கிடைப்பது என்பது பெரிய விஷயம். டி.டி.வி.தினகரன் என்னுடன் பேசிய பிறகு தான் அந்த பதவியை எனக்கு கொடுத்தார். ஆனால் எனது உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் அந்த பதவியை ஏற்பதில் தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்தேன். எனவே தான் தினகரன் கொடுத்த பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்தேன்.
முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவரது தலைமையில் ஆட்சி நன்றாக நடந்து வருகிறது. நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் கட்சியை வளர்க்க முடியும்.
வருகிற 10–ந் தேதி டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து அவரிடம் விளக்கம் அளிக்க உள்ளேன். அதன்பின்னர் கட்சிப் பொறுப்பை ஏற்று செயல்பட தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்தையா கூறியதாவது:–
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வழங்கி உள்ள பதவியை இயதப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்களில் முதன்முதலாக ஆதரவு தெரிவித்தவன் நான். அ.தி.மு.க.வை தலைமை ஏற்று வழிநடத்தும் வல்லமை பெற்றவர் டி.டி.வி. தினகரன்.
எனக்கு கிடைத்துள்ள இந்த பதவி மூலம் வருகிற பாராளுமன்ற தேர்தல், அடுத்து வரும் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக கட்சிப்பணிகளில் ஈடுபடுவேன். ஜெயலலிதா கூறியபடி இன்னும் 100 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. ஆட்சி தொடரும்.
தற்போது அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு என்பது தற்காலிகமானது தான் நிரந்தரம் அல்ல. காலச்சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள இந்த பிளவு மிக விரைவில் மாறி அனைவரும் ஒன்றிணைந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய பாதையில் அ.தி.மு.க. பயணிக்கும். அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கனவு காணும் எதிர்க்கட்சிகளின் கனவு, பகல் கனவாகவே முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.