விருத்தாசலம் கோட்ட மின்சாரவாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
விவசாய நிலங்களில் மின்மீட்டர் பொறுத்தப்படுவதை கண்டித்து விருத்தாசலம் கோட்ட மின்சாரவாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விருத்தாசலம்,
தமிழகம் முழுவதும் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி, மேலப்பாளையூர், கீழப்பாளையூர், பெரியவடவாடி உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் மின்சாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் அங்கு மின்மீட்டர்கள் பொறுத்து பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும். இனி விவசாய பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் மத்தியில் தகவல் பரவியது.
இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் விருத்தாசலம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ஏற்கனவே கடும் வறட்சியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விவசாய பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்ய போவதாக தகவல் பரவி வருகிறது. இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டம் ஏதும் இருந்தால் அந்த முடிவை உடனே அரசு கைவிட வேண்டும். மேலும் விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொறுத்தும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து செயற்பொறியாளர் சரவணதுரைமோகன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் விவசாயிகளிடம் கூறியதாவது:– தமிழ்நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியின் அளவு தெரிகிறது. ஆனால் பயன்பாட்டின் முழு அளவை தெரிந்து கொள்ள முடியவில்லை.
இதில் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மின் அளவை எங்களால் கண்டறிய முடிகிறது. ஆனால் விவசாயிகள் பயன்படுத்தும் மின்சார அளவை கண்டறிய முடியவில்லை. விவசாய பயன்பாட்டிற்காக எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும் மின் இழப்பையும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதற்காகத்தான் விவசாய நிலங்களில் மின் மீட்டர் பெட்டிகள் பொறுத்தப்படுகிறது.
அதுவும் அனைத்து விவசாய நிலங்களிலும் மின்மீட்டர்களை பொறுத்த மாட்டோம். ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் 3 சதவீதம் அளவிற்கு மின் மீட்டர்கள் பொறுத்தப்படும். எனவே விவசாயிகள் யாரும் அச்சபடை தேவை இல்லை. கண்டிப்பாக இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என கூறினார். இதை ஏற்றி விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் கோகுலகிறிஸ்டீபன், அன்பழகன், ராமர், அண்ணாதுரை, கரும்பாயிரம், கந்தசாமி, பழனி, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தால் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.