என்.எல்.சி.யில் வேலை கிடைக்காததால் சான்றிதழ்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகம் வந்த இளைஞர்கள்
என்.எல்.சி.யில் வேலை கிடைக்காததால் கலெக்டரிடம் சான்றிதழ்களை ஒப்படைக்க வந்த இளைஞர்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் ஐ.டி.ஐ. படித்து விட்டு நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் பலர் என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் வேலை கிடைக்காததால், கடந்த மாதம் தங்கள் கல்விச்சான்றிதழ்களை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர். அப்போது அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் அவர்கள் தங்களின் கல்விச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு பதிவு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைப்பதற்காக கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
இது பற்றி அவர்கள் கூறுகையில், எங்கள் கோரிக்கை தொடர்பாக என்.எல்.சி. அதிபரிடம் பேச அனுமதி பெற்றுத்தரும் வரை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்க நாங்கள் முடிவு செய்து உள்ளோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் ராஜேசை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் தெரிவித்தார். இதை ஏற்று இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.