கொடைரோடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


கொடைரோடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 7 Aug 2017 10:15 PM GMT (Updated: 2017-08-08T02:16:35+05:30)

கொடைரோடு அருகே குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொடைரோடு,

நிலக்கோட்டை ஒன்றியம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டி ஊராட்சி கவுண்டன்பட்டியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு சுமார் 100–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அந்த பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைத்தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

வறட்சியின் காரணமாக ஆழ்துளை கிணறு தண்ணீரின்றி வறண்டது. இதனால் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். மேலும் விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் வத்தலக்குண்டு– மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும், புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story