குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் மனு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கொடுத்தனர்


குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் மனு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கொடுத்தனர்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:30 AM IST (Updated: 8 Aug 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

கோடாங்கிபட்டியில் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை கொடுத்தனர். இதில் கோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக காவிரி குடிநீர் வரவில்லை எனவும், ஆழ்குழாய் கிணறு மூலம் வினியோகிக்கப்பட்ட குடிநீரும் மின் மோட்டார் பழுதால் நிறுத்தப்பட்டிருப்பதாகவும், குடிநீருக்கு அலைய வேண்டியிருப்பதாகவும், குடிநீர் வசதிக்கு நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.

தும்பிவாடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் தேங்காய் சிரட்டையை எரித்து அதில் உள்ள துகள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், குடி தண்ணீரின் சுவை மாறுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.

ஈசநத்தம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றவர்களுக்கு மாதத்தில் இரு முறை ஒரு மணி நேரம் மட்டும் தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆழ்குழாய் கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நிரப்பப்படும் இடத்தில் திருட்டுத்தனமாக சிலர் குழாய்களில் இணைப்பு கொடுத்து தென்னை மரங்களுக்கு எடுத்து செல்கின்றனர். இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் சாக்கடை குழாய் அமைக்க வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

தோகைமலை பகுதியை சேர்ந்த மனோகரன் தனது மகன்கள் 2 பேரை இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு சிலர் மாற்றியதாகவும், மகன்களை மீட்டு தரக்கோரியும் மனு கொடுத்தார். இதேபோல் வேதாச்சலபுரத்தை சேர்ந்த பூங்கொடியும் தனது மகனை சிலர் வேறு மதத்திற்கு மாற்றியதாகவும், மகனை மீட்டுத்தரக்கோரியும் அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் வந்து மனு கொடுத்தார். சுயாட்சி இயக்கம் கிறிஸ்டினா சாமி மற்றும் விவசாயிகள் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடனுக்காக வைக்கப்பட்ட நகைகளை ஏலம் விடக்கூடாது எனவும், ஏலம் விடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

ஆத்தூர் செல்லரப்பாளையம் பகுதியை சேர்ந்த சாமியப்பன் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் காகித ஆலையின் கழிவு பொருட்களை கொட்டுவதால் குடிநீர் மாசுபடுவதாகவும், கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கோவிந்தராஜ் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 

Related Tags :
Next Story