மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு திருச்சியில், முதல்நாளில் 568 விண்ணப்பங்கள் வினியோகம்


மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு திருச்சியில், முதல்நாளில் 568 விண்ணப்பங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 8 Aug 2017 4:30 AM IST (Updated: 8 Aug 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

நர்சிங் உள்பட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு திருச்சியில் முதல்நாளில் 568 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.

திருச்சி,

பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி(பிசியோதெரபி) பி.எஸ்சி ரேடியாலஜி, இமேஜிங் டெக்னாலஜி உள்பட மருத்துவம் சார்ந்த 9 வகையான படிப்புகளுக்கு 2017-18 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு மருத்துவக்கல்லூரிகளில் நேற்று தொடங்கியது.

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணியை டீன்(பொறுப்பு) அனிதா தொடங்கி வைத்தார். முதல்நாளான நேற்று மாணவிகள் பலர் தங்கள் பெற்றோருடன் வந்து விண்ணப்பத்தினை பெற்று சென்றனர். விண்ணப்பங்களை வருகிற 23-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.

அந்தந்த கல்லூரி முதல்வர் களுக்கு விண்ணப்ப மனுவுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், செயலாளர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற பெயரில் எடுக்கப்பட்ட ரூ.400-க்கான கேட்பு வரைவோலையை இணைத்து கொடுத்து விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சாதிச்சான்றிதழின் நகலை இணைத்து கொடுத்து விண்ணப்பம் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக்கல்வி இயக்குனரகம், பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் சென்னை-10 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 24-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதல்நாளில் 568 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. 

Next Story