சிலிண்டரை பாடையில் தூக்கி வந்து பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்


சிலிண்டரை பாடையில் தூக்கி வந்து பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2017 10:30 PM GMT (Updated: 7 Aug 2017 9:29 PM GMT)

சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படுவதை கண்டித்து சேலத்தில் சிலிண்டரை பாடையில் தூக்கி வந்து பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

சேலம்,

மத்திய அரசு கியாஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்வதை கண்டித்தும், ரேஷன் பொருட்கள் வாங்க கடும் நிபந்தனைகள் விதித்ததை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று சூரமங்கலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஞானசவுந்தரி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் பரமேஸ்வரி, ராஜாத்தி உள்ளிட்ட மாதர் சங்க நிர்வாகிகளும் அனைந்திந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பெண்கள் சிலர், சமையல் கியாஸ் சிலிண்டரை பாடை கட்டியும், அதற்கு மாலை அணிவித்தும் தூக்கி வந்தனர். பின்னர் அனைவரும், ஒன்றுகூடி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறி கோஷம் எழுப்பினார்கள்.

போராட்டத்தின்போது மாவட்ட செயலாளர் ஞானசவுந்தரி கூறுகையில், ‘சமையல் கியாஸ் மானியத்தை மத்திய அரசு ரத்து செய்வது ஏழை, எளிய மக்களுக்கு செய்கின்ற துரோகம் ஆகும். அதுபோல ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வாங்க சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதாவது மாத வருமானம் ரூ.8,400 பெறுபவர்களும் இனி வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என்று தெரிவித்துள்ளது. அவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது. மத்திய அரசின் இந்த அறிவிப்புகளுக்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் மாநில அரசு மவுனமாக இருந்து வருகிறது. எனவே, இந்த அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்திட வேண்டும். இதேநிலை நீடித்தால் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்’ என்றார்.


Next Story