முதல் நாளில் மணல் லாரிகளுக்கான 360 அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு


முதல் நாளில் மணல் லாரிகளுக்கான 360 அசல் ஆவணங்கள் சரிபார்ப்பு
x
தினத்தந்தி 8 Aug 2017 4:30 AM IST (Updated: 8 Aug 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் முறைகேடுகளை தடுக்க நடந்த சிறப்பு முகாமின் முதல் நாளில் மணல் லாரிகளுக்கான 360 அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இதில் இன்சூரன்ஸ், சாலைவரி உள்ளிட்டவை கட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது.

சேலம்,

தமிழ்நாடு அரசின் மணல் இணைய சேவையில், மணல் ஏற்றி செல்லும் வாகனங்களின் பதிவுகளில் முறைகேடுகள் தவிர்க்கும் பொருட்டு வாகன ஆவணங்களை சரிபார்த்து முறையான அனுமதியை வழங்குவது குறித்து சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. சேலம் அஸ்தம்பட்டி சரபங்கா வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் இந்த முகாமை கலெக்டர் சம்பத் தொடங்கி வைத்தார்.

தொடக்க நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை சரபங்கா வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) வசந்தன், உதவி பொறியாளர்கள் பிரபு, வேதநாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தாமோதரன் (சேலம் மேற்கு), கதிரவன் (சேலம் கிழக்கு), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபு, துணை இயக்குனர் (கனிமவளம்) கலைச்செல்வன், சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன், உதவி பொறியாளர்கள் பிரபு, வேதநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முகாமிற்கு வந்த மணல் லாரி உரிமையாளர்கள், www.tnsand.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தில் தங்களது வாகனத்தின் நடப்பில் உள்ள வாகன பதிவுக்கான ஆர்.சி.புக், வாகன அனுமதி சான்று (பர்மிட்), வாகன தகுதிச்சான்று (எப்.சி.), சாலைவரி ரசீது, இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து, அதில் இருந்து பதிவிறக்கம் செய்த படிவத்துடன் வந்திருந்தனர். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் கண்ணையன், பொருளாளர் முருகேசன், துணைத்தலைவர் சந்திரன், துணை செயலாளர் பழனிசாமி, செய்தி தொடர்பாளர் வெள்ளையன் என்ற ரவி உள்பட மணல் லாரி உரிமையாளர்கள் 200–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆவணங்களை சரிபார்ப்பதற்காக 5 கவுன்டர்கள் திறக்கப்பட்டு 5 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது கலெக்டர் சம்பத் பேசுகையில், ‘‘இந்த முகாம் வருகிற 11–ந் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடக்கிறது. இங்கு சரிபார்க்கும் அசல் ஆவணங்கள் கோவையில் உள்ள இணையதளம் வாயிலாக வெளியிடப்படும். மேலும், முகாமில் ஆவணங்கள் சரிபார்ப்பு மேற்கொள்ளும் லாரிகள் மட்டுமே இணையதள மணல் சேவையினை பயன்படுத்திக்கொள்ள முடியும். தவறான ஆவணங்கள் கொண்ட வாகனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது‘‘ என்றார்.

நேற்று காலை முதல் மாலை 5.30 மணிவரை நடந்த முதல் நாள் முகாமில் மட்டும் 360 லாரிகளுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதாகவும், இன்சூரன்ஸ் காலாவதியானவை, சாலைவரி நிலுவையில் உள்ள ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை திரும்ப அனுப்பி, சரிசெய்ய 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story