அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பெற்றோர்கள் சாலைமறியல்
எடப்பாடி அருகே, அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
எடப்பாடி,
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 142 மாணவ, மாணவிகள் 6–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். பள்ளியில் 10–க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக சுந்தரவடிவேல் உள்ளார்.
இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சில மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்து, அந்த ஆசிரியரை கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் அந்த ஆசிரியர் மாணவிகள் கழிவறைக்கு செல்லும்போது கதவை திறந்து வைத்துதான் செல்லவேண்டும் என்று கூறியதோடு, மாணவிகள் பாடத்தில் சந்தேகம் கேட்டால் அவர்களது தோளில் கைபோட்டபடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு, அந்த ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரமாகியும் எந்த அதிகாரியும் வராததால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் கொங்கணாபுரம் – ஓமலூர் ரோட்டில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்த மகுடஞ்சாவடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் பெரியதம்பி, பழனிசாமி மற்றும் போலீசார் அங்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதற்கிடையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் கல்வி அதிகாரி செல்வராஜ் ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.