கிராம ஊராட்சிகளில் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்


கிராம ஊராட்சிகளில் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Aug 2017 3:50 AM IST (Updated: 8 Aug 2017 3:49 AM IST)
t-max-icont-min-icon

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும், என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

தர்மபுரி – கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர் பணியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் கதிரவனிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் அரசாணைப்படி, 200 நாட்களும், அதற்கு மேலும் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படும் என தெரிவித்து 2015–ல் ஆண்டு தூய்மை காவலர்கள் நியமனம் செய்து, அனைத்து ஊராட்சிகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள். அந்த அரசாணையில் முதல் 100 நாட்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழும், அடுத்த 100 நாட்கள் மாநில நிதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பணிபுரியும் தூய்மை காவலர்கள் என்ற பெயரில் நியமனம் செய்து பணிபுரிந்து வருபவர்களுக்கு சட்டை, டிரை சைக்கிள், கிளவுஸ், சோப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து ஊராட்சிக்கு நிதி ஆதாரம் கிடைக்கின்ற வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே அரசாணையில் முதல் ஆண்டில் மேற்படி திட்டங்களின் கீழும், அடுத்த ஆண்டு முதல் ஊராட்சிகளின் நிதியிலிருந்து தூய்மை காவலர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தூய்மை காவலர்களுக்கு 100 நாட்கள் மட்டுமே பணி என்றும், சுழற்சி முறையில் குழுக்களை நியமனம் செய்து, அவர்களுக்கு பணி வழங்கப்படும் என தெரிவித்து, தற்போது பணிபுரியும் தூய்மை காவலர்களை பணியிலிருந்து நிறுத்தம் செய்து வருகிறார்கள். இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, தூய்மை காவலர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும், கிராம சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், தறபோதைய சுகாதார சீர்கேட்டினால் டெங்கு போன்ற காய்ச்சல் பரவி வரும் நிலையில், ஏற்கனவே பணிபுரிந்து வரும் தூய்மை காவலர்களை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story