மும்பையில் ரக்ஷா பந்தன் உற்சாக கொண்டாட்டம்


மும்பையில் ரக்ஷா பந்தன் உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2017 3:54 AM IST (Updated: 8 Aug 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் ரக்ஷா பந்தன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பெண்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.

மும்பை,

சகோதரத்துவத்தின் மேன்மையை உணர்த்தும் ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகை நேற்று மும்பை உள்பட மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரக்ஷா பந்தனையொட்டி மும்பை முழுவதும் கடைத்தெருக்களில் விதவிதமான ராக்கி கயிறு விற்பனை களை கட்டியிருந்தது.

பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு கையில் கட்டுவதற்காக ஆர்வத்துடன் ராக்கி கயிறுகளை வாங்கினார்கள். மேலும் இந்த பண்டிகையையொட்டி பலகார கடைகளில் இனிப்பு பண்டங்களின் வியாபாரமும் மும்முரமாக நடந்தது.

ரக்ஷாபந்தனையொட்டி நேற்று பெண்கள் காலை முதலே கோவில்களுக்கு சென்று தங்கள் சகோதர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி இறைவனை வேண்டினர்.

பின்னர் அவர்கள் வீடுகளுக்கு சென்று தங்கள் சகோதரர்களுக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டனர். இதையடுத்து இனிப்பு வழங்கி ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். தங்களுக்கு ராக்கி கட்டிய சகோதரிகளுக்கு அவர்களது சகோதரர்கள் பரிசுப்பொருட்களையும், பணத்தையும் கொடுத்து மகிழ்வித்தனர்.

இதேப்போல திருமணம் முடிந்து சென்றவர்கள் தங்கள் சகோதர, சகோதரிகளின் வீடுகளுக்கு சென்று ரக்ஷா பந்தனை உற்சாகமாக கொண்டாடினர்.

நேற்று சந்திரகிரகணம் என்பதால் பெரும்பாலான பெண்கள் நேற்றுமுன்தினமே தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story