திருச்செங்கோடு அருகே பஸ்கள் மோதல்; 45 பேர் காயம்


திருச்செங்கோடு அருகே பஸ்கள் மோதல்; 45 பேர் காயம்
x

திருச்செங்கோடு அருகே பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 45 பேர் காயம் அடந்தனர்.

எலச்சிப்பாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் பஸ் சேலம் நோக்கி சென்றது. திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி அருகில் சென்ற போது எதிரே சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு மற்றொரு தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பஸ்களின் முன்பகுதியும் நொறுங்கியது.

இந்த விபத்தில் சித்தளாந்தூரை சேர்ந்த பஸ் டிரைவர் சிவா (வயது 27), வைப்பமலையை சேர்ந்த அம்பேத்கர் (44), பஸ் பயணிகள் குன்னூரை சேர்ந்த ஆசிக் (16), சூரியம்பாளையத்தை சேர்ந்த சுலோச்சனா(45), திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஹரிகரகுமார் (35), அவருடைய மனைவி அருள்பிரியா(26), இவர்களின் குழந்தைகள் லோகேஷ்(5), ஈஸ்வரன்(4), தர்மபுரியை சேர்ந்த ராஜா(47), இவருடைய மனைவி விஜியா(42), சேலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி அமிர்தலிங்கம்(67), வட்டூரை சேர்ந்த அய்யாவு, அரூரை சேர்ந்த கல்லூரி மாணவி சண்முகபிரியா(18) உள்ளிட்ட 45 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றி திருச்செங்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பஸ்கள் மோதிக்கொண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்தில் சிக்கிய பஸ்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

Next Story