டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அவசர ஆலோசனை மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் நடந்தது
புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அதிகாரிகளுடன் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அவசர ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை தாங்கினார்.
இதில் துறை செயலர் நரேந்திரகுமார், உள்ளாட்சித்துறை செயலர் ஜவகர், சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சிதுறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுவையில் டெங்கு நோய் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு நடத்தவும், அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கவும், பள்ளிக்கூடங்களை தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்துதல் மற்றும் ஆய்வு செய்தல், சுகாதார நிலையங்களில் நிலவேம்பு கசாயம் வழங்குதல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு புதுவையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.