தமிழகத்தில் உபரியாகும் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது
தமிழகத்தில் உபரியாகும் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
வேலூர்,
தமிழகத்தில் உபரியாகும் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் அனைத்து மண்டலங்களுக்கு இடையே ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகள் வேலூர் வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தில் நடந்தது. இந்த போட்டிகளில் சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. பரிசளிப்பு விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார்.விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் ஆகியோர் கலந்து கொண்டு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு சாம்பியன்ஸ் கோப்பையினையும், கோவை, சென்னை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களுக்கு பரிசுக்கோப்பைகளையும் வழங்கினர்.
விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:–இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் என்பது மக்களின் அடிப்படை தேவையாக உள்ளது. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா 2011–ம் ஆண்டு தேர்தலின்போது அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்று வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றியதால் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. தற்போது தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கும் அளவிற்கு உபரி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அடுத்த ஆண்டுக்குள் இந்த துறையை லாபகரமான துறையாக மாற்றிட பணியாளர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும். இங்கு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தோல்வி அடைந்தவர்கள் இனி வரும் காலங்களில் வெற்றி பெற தொடர்ந்து முயற்சிகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.