போர்க்களத்திற்கு தயாராகிவிட்ட நிஜ டிரான்ஸ்பார்மர்


போர்க்களத்திற்கு தயாராகிவிட்ட நிஜ டிரான்ஸ்பார்மர்
x
தினத்தந்தி 8 Aug 2017 1:08 PM IST (Updated: 8 Aug 2017 1:08 PM IST)
t-max-icont-min-icon

ஹாலிவுட் திரைப்படமான டிரான்ஸ்பார்மர்ஸில், உருமாறும் ரோபோக்கள் போர்க்களத்தை அமர்க்களப்படுத்தும். அந்த கற்பனை நிஜமாக உருவெடுத்து உண்மையான போர்க்களத்தை சந்திக்கத் தயாராகி விட்டது.

‘டீம் அமெரிக்கா’ என்ற அமெரிக்க குழு ஒன்று, பிரமாண்டமான போர்க்கள ரோபோவை உருவாக்கி உள்ளது. இதற்கு ‘மெகாபாட்ஸ்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். இந்த அசுர ரோபோ 16 அடி உயரம் கொண்டது. 12 டன் எடை கொண்டது. 430 குதிரைத் திறன் சக்தி படைத்தது.

இதன் முக பகுதியில் 2 பேர் அமரும் இருக்கையும், கட்டுப்பாட்டு கருவிகளும் உள்ளன. குறிப்பிட்ட தூரம் வரை உள்ள தடைகளையும், வழிகளையும் ஸ்கேன் செய்து உணர்ந்து கொள்ளக்கூடியது இந்த ரோபோ. தடைகளை தகர்க்கும் படியான உறுதியான தற்காப்பு ஆயுதங்கள் கொண்டது. வலது கை, இடுக்கி போன்று செயல்பட்டு தடைகளை தகர்க்கும். இடது கையில் இரட்டைத் துப்பாக்கி உள்ளது. இரும்பு பட்டை சக்கரம் எத்தகைய பரப்பிலும் முன்னேறிச் செல்லக்கூடியது. குண்டு துளைக்காத கண்ணாடி மற்றும் உலோகங்களால் ஆனது இந்த ரோபோ. எதிரிகளை, கேமரா மற்றும் சென்சார் உதவியுடன் கண்டறியும் இந்த ரோபோ, வலிந்து சென்று தாக்குதல் நடத்தி வெற்றி பெறக்கூடியது.

ரோபோ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும், ஜப்பான் குழு, கடந்த 2015-ம் ஆண்டு இதுபோல குராடாஸ் என்ற ராட்சத ரோபோவை தயாரித்து சோதனை நடத்தியது. இதை மிஞ்சும் வகையில் திட்டமிட்டு அமெரிக்க குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது ‘மெகாபாட்ஸ்’ ரோபோ. எதிர்கால ராணுவத்தை இதுபோல எந்திரன்கள்தான் ஆக்கிரமிப்பார்கள்போலும்! 

Next Story