மூளை- கம்ப்யூட்டர் இடைமுக கருவி!


மூளை- கம்ப்யூட்டர் இடைமுக கருவி!
x
தினத்தந்தி 8 Aug 2017 1:11 PM IST (Updated: 8 Aug 2017 1:11 PM IST)
t-max-icont-min-icon

தொடக்கத்தில் பெரியதாக இருந்த கம்ப்யூட்டர் இன்று ஸ்மார்ட் போனாக கைக்கு அடக்கமாக சுருங்கிவிட்டது.

லகின் முதல் கம்ப்யூட்டர், அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜே.ப்ரெஸ்பர் எக்கர்ட் மற்றும் ஜான் மவுச்லி ஆகியோரால் கடந்த 1946-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கம்ப்யூட்டர் 1,800 சதுர அடி கொண்ட வீடு முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டு, சுமார் 50 டன் எடைகொண்டதாக இருந்தது என்றால் உங்களால் நம்ப முடி கிறதா?

தொடக்கத்தில் அவ்வளவு பெரியதாக இருந்த கம்ப்யூட்டர் இன்று ஸ்மார்ட் போனாக கைக்கு அடக்கமாக சுருங்கிவிட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்னும் சில வருடங்களில் ஸ்மார்ட் போனும் காணாமல் போய்விடும் என்கிறார்கள் தொழில்நுட்ப உலக தீர்க்கதரிசிகள்.

ஏனென்றால், இல்லாத ஒன்றை இருப்பது காட்டும் அசாத்திய திறன்கொண்ட தொழில்நுட்பமான ‘வர்ச்சுவல் ரியாலிட்டி’ (Virtual Reality) எனப்படும் மெய்நிகர் கருவிகள், ஸ்மார்ட்போனை இன்னும் சில வருடங்களுக்குள்ளாகவே ஓரங்கட்டி விடும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.

‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்று ஒரு குறள் எழுதியிருக்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அதாவது, ‘எந்தப் பொருளானாலும், அது எப்படிக் காட்சி தந்தாலும், அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல், உள்ளடக்கமாகிய உண்மைப் பொரு ளைக் காண்பதே மெய்யுணர்தல்’ என்பது விளக்க மாகும்.

ஆனால், ‘நம் கண்முன்னே இல்லாத ஒன்றை தத்ரூபமாக தோன்ற வைத்து, அது உண்மை’ என்று நம்மை நம்ப வைப்பதுதான் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் அடிப்படை நோக்கமே. மெய்நிகர் உலக தொழில்நுட்பம் கடந்த 1990 களிலேயே உருவாக்கப்பட்டாலும், கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆக்கியுலஸ் ரிப்ட்’ (Oculus Rift) எனும் மெய்நிகர் கருவி மூலமாக மெய்நிகர் தொழில்நுட்ப யுகம் உண்மையாகத் தொடங்கிவிட்டது என்கின்றனர் சில விஞ்ஞானிகள்.

எப்படி என்றால், இதுவரையிலான மெய்நிகர் கருவிகள் மூலம் மெய்நிகர் உருவங்களை பார்க்கவும், மெய்நிகர் உலகின் சப்தத்தை கேட்கவும் மட்டும்தான் முடிந்தது. ஆனால் தற்போதுள்ள கருவிகள் மூலம் உருவங்களை தொடவும், மெய்நிகர் உலக காற்று மற்றும் வெப்பத்தை உணரவும் முடியும். அவ்வளவு ஏன், மெய்நிகர் உலகின் உணவுகளைக் கூட ருசிக்க முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இவ்வளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும கூட, மெய்நிகர் உலகில் சஞ்சரிக்கும் அனைவரும் அது ஒரு பொய்யான உலகம்தான் என்பதை தெளிவாக உணர முடியும். ஏனென்றால், தலையில் மற்றும் உடலின் வேறு பகுதிகளில் அணியக் கூடிய மெய்நிகர் கருவிகள் மூலமாகத்தான் நாம் மெய்நிகர் உலகத்துக்குள் செல்ல முடியும். ஆக, மெய்நிகர் தொழில்நுட்பம் இன்னும் முழுமை அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

அப்படி என்றால், அது எப்போது, எப்படி முழுமை அடையும்? நாம் மெய்நிகர் தொழில்நுட்ப யுகத்தைவிட்டு வெளியேறி, ‘நியூரோ ரியாலிட்டி’ (neuro reality) எனப்படும் ‘நரம்பியல் மெய்ம்பு’ யுகத்திற்குள் நுழைய வேண்டும். அப்போதுதான் மெய்நிகர் உலகத்துக்கும் நம்முடைய உலகத்திற்குமான வேறுபாடு இல்லாமல் செயல்பட்டு மெய்நிகர் தொழில்நுட்பம் முழுமை அடையும் என்று கூறப்படுகிறது.

நேரடியாக மூளையுடன் தொடர்புகொண்டு அதனைக் கட்டுப்படுத்தும் மூளை-கம்ப்யூட்டர் இடைமுகக் கருவிகள் மூலமாக ஒரு மெய்மையை அல்லது முழுமையான மெய்நிகர் உலகத்தை உருவாக்குவதே ‘நரம்பியல் மெய்ம்பு’ என்று கூறப்படுகிறது. அதாவது, நீங்கள் ஒரு வர்ச்சுவல் ரியாலிட்டியில் ஒரு கத்தி சண்டை கேம் விளையாடினால் உங்கள் கையில் பொம்மை கத்தி எதுவும் இருக்கக் கூடாது. கத்தியே இல்லாமல் கத்தியுடன் சண்டை போடும் உணர்வு உங்களுக்கு ஏற்பட வேண்டும்.

இதனை சாத்தியப்படுத்தும் மூளை-கம்ப்யூட்டர் இடைமுகக் கருவிகள் இரண்டு வகைப்படும். ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக மூளைக்குள் பொருத்தப்படும் உட்பொருத்தி (implant) கருவி. மற்றொன்று, மூளையை வெளியில் இருந்து தூண்டும் மின்கம்பிகள் கொண்ட தலையணி கருவிகள்.

இயற்பியலாளர் டான் குக் 2013-ல் நிறுவிய ஐமைன்ட் (EyeMynd), வெறும் எண்ணத்தின் மூலமாகவே நம்மை மெய்நிகர் உலகத்துக்குள் கொண்டு செல்லும் கருவியை உருவாக்கியுள்ளது. அதாவது, நாம் கனவு காணுவதைப் போல என்கிறார் குக்.

இது தவிர, நியூரபுல் (Neurable), எமோட்டிவ் (EMOTIV) மற்றும் பேஸ்புக், ஆசிக் (OSSIC), இலான் மஸ்கின் நியூராலிங்க் (Neuralink), பிரெயின் ட்ரீ உள்ளிட்ட உலகின் பல முன்னணி நிறுவனங்கள் மூளைக்குள் பொருத்தத் தேவையில்லாத தலையணி மெய்நிகர் கருவிகளை உருவாக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story