மருந்து உற்பத்திக்கு உதவும் பயோ பிரிண்டர்!
மனித உடலுக்கான மாற்று பாகங்களை தயாரிக்கும் முப்பரிமாண உயிரியல் அச்சுப்பொறி தொழில்நுட்ப மானது பல முன்னேற்றங்களை கண்டுவருவது உண்மை.
நாம் தற்போது மிக மிக நவீனமான தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். மருத்துவமும் நவீனமடைந்து கொண்டே வருகிறது. ஆனாலும் உடல்பாக செயலிழப்புக்கு இன்று வரை (கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக) ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது இறந்த உடலில் இருந்து எடுக்கப்படும் அல்லது இறக்கும் தருவாயில் உள்ள ஒருவரால் தானமாக கொடுக்கப்படும் மாற்று பாகத்தை பொருத்திக்கொள்வதுதான்.
ஆனால் அதேசமயம், ஒருவருக்கான மாற்று உடல் பாகத்தை முப்பரிமாணத்தில் அச்சிடக்கூடிய கருவியான ‘3 டி உயிரியல் அச்சுப்பொறி (3 D Bio printer) ஒன்று கடந்த பல வருடங்களாக உருவாக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 3 டி உயிரியல் அச்சுப்பொறி எந்திரத்தின் அடிப்படைத் தொழில்நுட்பமான முப்பரிமாண அச்சுப்பொறி (3 D printer) அசுர வேகத்தில் வளர்ந்து இன்று வீடுகள் உள்ளிட்ட சிக்கலான பல கட்டிடங்களை சில மணி நேரம் முதல் சில நாட்களில் கட்டி முடிக்கும் அளவுக்கு அதீத முன்னேற்றம் கண்டிருக்கிறது.
ஆனால் உயிரியல் அச்சுப்பொறி தொழில்நுட்பத்தில் மட்டும் ஏன் இந்த தொய்வு என்று கேட்டால், கட்டிடங்கள், இதர பல்வேறு வடிவங்களை முப்பரிமாணத்தில் அச்சடிப்பது சுலபம். ஆனால், உயிரணுக்களால் ஆன திசுக்கள், அந்த திசுக்களால் ஆன உடல் பாகங்களை இயற்கையான அமைப்பு மற்றும் செயல்திறனுடன் உருவாக்குவது என்பது கிட்டத்தட்ட முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதையாக மிக மிகக் கடினமான, சிக்கலான ஒன்று.
ஏனென்றால், அடிப்படையான ஒரு முப்பரிமாண அச்சுப்பொறியில் ‘தெர்மோ பிளாஸ்டிக்’ எனும் ரசாயனத்தால் ஆன குழம்பானது சுமார் 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூடேற்றப்பட்டு அச்சுகளுக்குள் செலுத்தப்படும். அவ்வளவுதான் வேலை முடிந்தது. ஆனால் முப்பரிமாண உயிரியல் அச்சுப்பொறியை பயன்படுத்துவது அவ்வளவு எளிமையானதல்ல.
உதாரணமாக, முதலில் உயிரியல் அச்சுப்பொறியானது எல்லா நேரத்திலும் கிருமிகள் அல்லது நுண்ணியிரிகள் இல்லாத ஒரு சுத்தமான சூழலில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். அடுத்ததாக, உயிரியல் மூலக்கூறுகள் மற்றும் உயிரணுக்களால் ஆன உயிர்மை அல்லது ‘பயோ இங்க்’ (Bio ink) 37 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைக்கப்பட்டு, சீரான காற்றழுத்தத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும். இது எல்லாவற்றுக்கும் மேலாக, உயிரணுக்கள் கொண்டு அச்சடிக்கப்படும் உடல் பாகங்களுக்குள் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களை உயிரியல் அமைப்பின் விதிகளின்படி வடிவமைப்பது மிக மிகக் கடினமானது.
இதன் காரணமாகவே, மனித உடலுக்கான மாற்று பாகங்களை தயாரிக்கும் முப்பரிமாண உயிரியல் அச்சுப்பொறி தொழில்நுட்ப மானது பல முன்னேற்றங்களை கண்டுவருவது உண்மை என்றாலும், கடந்த பல ஆண்டுகளாகவே தொடக்க நிலையில்தான் இருந்துவருகிறது.
ஆனால், பல்வேறு நோய்களுக்கான புதிய மருந்து உற்பத்தியை துரிதப்படுத்த 3 டி உயிரியல் அச்சுப்பொறி பெரிதும் உதவுகிறது என்கிறார்கள் ஆஸ்திரேலியாவிலுள்ள யுனிவர்சிடி ஆப் சவுத் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் பிரசாத் சாஸ்திரி தலைமையிலான ஆய்வாளர்கள். அதாவது, புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்ட உடன் எலிகள், குரங்குகள் உள்ளிட்ட பல விலங்குகளில் பரிசோதிக்கப்படும். இறுதிக்கட்டத்தில் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்படும்.
இதில் இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று, எலி போன்ற விலங்குகளின் உடல் அமைப்பு மனிதர்களுடன் ஒப்பிடுகையில் மிக மிக வித்தியாசமானவை என்பதால் எலிகள் மீதான பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் மருந்து பயனற்றுப்போகின்றன. இரண்டாவது, புதிய மருந்துகளை மனிதர்கள் மீது பரிசோதிக்கும்போது பல நோயாளிகள் அல்லது தன்னார்வலர்கள் இறந்து போகிறார்கள்.
ஆனால், எலிகள் மற்றும் மனிதர்களுக்குப் பதிலாக 3 டி உயிரியல் அச்சுப்பொறி மூலம் உருவாக்கப்படும் கல்லீரல், நுரையீரல், இதயம் போன்ற உடல் பாகங்களைக்கொண்டு புதிய மருந்து தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டால், மருந்துகளை தற்போதுள்ளதைவிட பலமடங்கு வேகமாக மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவந்துவிடலாம் என்கிறார் பேராசிரியர் பிரசாத் சாஸ்திரி.
ஆக, மனிதர்களுக்கான மாற்று உடல் பாகங்களை 3 டி உயிரியல் அச்சுப்பொறியில் உற்பத்தி செய்ய இன்னும் பல ஆண்டுகாலம் ஆகும். ஆனால் அதுவரை அந்த பாகங்களை மருந்து உற்பத்திக்கு பயன்படுத்திக்கொண்டால் பல உயிர்களைக் காப்பாற்றலாம் என்கிறார்கள் பிரசாத் சாஸ்திரி உள்ளிட்ட உலக மருத்துவ விஞ்ஞானிகள்.
Related Tags :
Next Story